காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளது.

இந்த அறப்போர் வெற்றிபெற அனைவரும் எமது வீட்டுப்பிரச்சினை என்ற வகையில் ஆதரவு வழங்குவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் நேற்று (வியாழக்கிழமை) அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கையில், “ஈழ வரலாறு சோகத்தோடுதான் தொடர்கின்றது. முள்ளிவாய்க்காலுக்கு முன்பே இந்த சோகம் நம்மோடு இருந்தது. அதன் காரண கர்த்தாக்களும் நம்மோடு சேர்ந்து கவலைப்படுவதும் இன்னொரு சோகம்தான். இதற்கு சர்வதேச தரத்திலான பரிகாரம் எமது மக்களுக்கு வேண்டும்.
காணாமல் போனோர் தொடர்பில் ஒரு சட்ட ஏற்பாடு உண்டு. அதுதான் அந்த ஏழுவருடம் என்னும் காலக்கெடு. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அதுபொருந்தாது. ஒப்படைக்கப்பட்டவர்கள், வாக்குறுதியின் பேரில் தாமே தம்மை ஒப்படைத்தவர்கள், பலரின் முன்னால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எல்லாம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தான்.
ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 30/1, 34/1 தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியது இன்றைய அரசின் தார்மீகக் கடமை. இந்தப் பொறுப்பிலிருந்து விலக அரசுக்கு துளியளவும் இடமளித்தல் ஆகாது.
இவ்வகையிலே வரும் 19.03.2019 அன்று கிழக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தவுள்ள கடையடைப்புப் போராட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றது. இந்த அறப்போர் வெற்றிபெற அனைவரும் இது எங்கள் வீட்டுப்பிரச்சினை என்ற வகையில் ஆதரவு வழங்குவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.