கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இக்கூட்டத்தில், அனர்த்த நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும், மக்களை பாதுகாப்பது மற்றும் முகாம்களில் தங்கியுள்ளோர் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்கள சார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கடந்த 21ஆம் திகதி பெய்த அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம், வடக்கில் சுமார் 75,000 பேரை நிர்க்கதியாக்கியுள்ளது. குறிப்பாக, கிளிநொச்சியில் மாத்திரம் சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 12,000 பேர் வரை இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு படிப்படியாக திரும்பியபோதும், நேற்று முன்தினம் இரவு மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்தது. இந்நிலையில், வீடுகளுக்குச் சென்ற மக்கள் மீண்டும் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.