Ad Widget

காரைநகர் உவர்நீர்த் தடுப்பணை உடைப்பு!!புனரமைப்புப் பணியில் வடக்கு விவசாய அமைச்சு தீவிரம்

காரைநகர் வேணன் உவர்நீர்த் தடுப்பணை விசமிகளால் உடைக்கப்பட்டதால் அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த மழைநீர் கடலினுள் பாயத் தொடங்கியுள்ளது. இது வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து உடைக்கப்பட்ட அணைப்பகுதியைத் தற்காலிகமாகப் புனரமைக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1

இன்று புதன்கிழமை (03.12.2014) பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.சுதாகரன் மற்றும் நீர்ப்பாசனப் பொறியியலாளர் க.கருணாநிதி ஆகியோருடன் அங்கு சென்றிருந்த அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் பணிப்பின்பேரில் மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி அணை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதோடு, விசமிகளைக் கண்டறியக்கோரி ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடும் குடிநீர்ப்பற்றாக்குறைவு நிலவும் காரைநகரில் கடல்நீர் உள்ளே வராமல் தடுத்து, நிலத்தடிநீரை மேம்படுத்தும் நோக்கில் வேணான் உவர்நீர்த் தடுப்பணை அமரர் ஆ.தியாகராஜா 70 களில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவரது முயற்சியால் உருவாக்கப்பட்டது.

3

இதனால் பல உவர்நீர்க்கிணறுகள் நன்னீராக மாறியுள்ளன. ஆனால், போர் காரணமாக பராமரிப்புப் பணிகள் இல்லாததால் அணை பல வருடங்களாகச் சேதமடைந்து காணப்பட்டது. கடந்து ஆண்டே ஆசிய அபிவிருத்தி வங்கியின் 23 மில்லியன் ரூபா நிதி உதவியோடு ஏறத்தாழ 5 கிலோ மீற்றர் நீளமான இந்தத் தடுப்பணை புனரமைக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரமாகப் பெய்த பெருமழையினால் இந்த அணைக்கட்டில் பாரிய நீர்த்தேக்கம் போல மழைநீர் தேங்கிக் காணப்பட்டது. இதனால் காரைநகர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமது நன்னீர்வளம் மேம்படும் என்று நம்பியிருந்த நிலையிலேயே சில விசமிகளால் அணைக்கட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒன்றரை அடி அகலத்தில் உடைக்கப்பட்டிருந்த பகுதி, மழைநீர் பேராறு போல கடலை நோக்கிப் பாயத் தொடங்கியதால் அரிக்கப்பட்டுச் சில மணித்தியாலங்களுக்குள்ளாகவே 100 அடி அகலத்துக்கு உடைப்பெடுத்துள்ளது.

இதனைப் பார்வையிடுவதற்காகக் காரைநகருக்குச் சென்றிருந்த அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இது தொடர்பாகத் தெரிவித்தபோது,

4

யாழ்ப்பாணக் குடாநாடு எதிர்கொண்டிருக்கும் குடிநீர்ப் பிரச்சினை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதுவும் காரைநகர் அபிவிருத்திச்சபையினதும் பிரதேசசபையினதும் தண்ணீர்த்தாங்கி வாகனங்களைத் தினமும் எதிர்பார்த்து நிற்கும் காரைநகர் மக்களுக்கு இந்தப் பிரச்சினை இன்னும் அதிகமாகவே புரியும். எமது அமைச்சும் காரைநகர் ஊரிப் பகுதிக்குத் தினமும் இரண்டு வேளை குடிதண்ணீரை வழங்கிவந்துள்ளது. இந்தநிலையிலேயே, சில விசமிகள் அணைக்கட்டை உடைக்கும் நாசகாரச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.

கடும் வரட்சிக்குப் பின்னர் மழை இப்போதுதான் பெய்ய ஆரம்பித்துள்ளது. சொட்டு மழைநீரையும் வீணாகக் கடலுக்குள் செல்வதற்கு அனுமதிக்க முடியாத சூழ்நிலையே வடக்கில் நிலவுகிறது. இதைப்புரிந்துகொண்டு, மழைநீர் தேங்குவதால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைப் பொதுமக்கள் ஒரு சில நாட்களுக்குப் பொறுத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிடில், குடிநீருக்கு இப்போது அலைவதைவிட வருங்காலங்களில் அதிகமாகவே அலையவேண்டிய நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

9

நீர்ப்பாசனத்திணைக்களம் உடைக்கப்பட்ட அணைக்கட்டுப் பகுதியைப் புனரமைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் நிலையில், காரைநகர் பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பின்பேரில் அப்பகுதிக்குச் சில இராணுவத்தினர் மம்பட்டிகளுடன் சமுகமளித்ததிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Related Posts