யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதியின் நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
குறித்த உல்லாச விடுதியின் நிர்மாணப் பணிகளுக்கு தடை விதிக்குமாறு கோரி சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் கட்டட நிர்மாண பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
அத்துடன், குறித்த தடையுத்தரவு தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு அறிவிக்குமாறும், கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ள இடத்தில் தடையுத்தரவு அறிவுறுத்தல் துண்டை ஒட்டுமாறும் கட்டளையிட்டார்.
குறித்த உல்லாச விடுதி அமைக்கப்படவுள்ள பிரதேசத்திற்கு மிக அண்மித்த பகுதியில் பாடசாலைகள், ஆலயங்கள் உள்ளன எனவும், குறித்த பகுதி நன்னீர் தேக்கமாக காணப்படும் இடம் என்பதனால், குறித்த உல்லாச விடுதி நிர்மாணிக்க தடை விதிக்க வேண்டும் என சுகாதார வைத்திய அதிகாரியின் மனுவில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.