Ad Widget

காணி பறிப்பு அறிவிப்பை மீளாய்வு செய்ய அறிவுறுத்து உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன்

ARMY-SriLankaவலி. வடக்கில் சுவீகரிப்புக்கு உட்படுத்தப்படவுள்ள காணிகளை உடனடியாகத் தன்வசப்படுத்தும் அறிவித்தலை அரசு மீளாய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன், காணி உரிமையாளர்களின் ஆட்சேபனைகளுக்கு இடமளித்து அதன் பிரகாரம் காணிச் சுவீகரிப்பை முதலில் முறைப்படுத்துமாறும் கூறினார்.

வலி.வடக்கில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணியை அரசு சுவீகரிக்கவுள்ளமை தொடர்பில் காணி உரிமையாளர்கள் சிலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில சட்டத்தரணிகளின் உதவியுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீபவன், நீதியரசர் சத்தியா ஹெட்டிகே முன்னிலையில் நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதியரசர் ஸ்ரீபவன், காணிச் சுவீகரிப்புச் சட்டத்தின் பிரிவு 38 காப்புரை (ஏ) பந்தியின் கீழ் சுவீகரிப்புக்கு உட்படுத்தப்படும் காணிகளை உடனடியாகத் தம்வசப்படுத்தும் அறிவித்தலை மீளாய்வு செய்யுமாறு அரச தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் சவிந்திர பெர்னாண்டோவுக்கு அறிவுரை வழங்கினார்.

காணிச் சுவீகரிப்புச் சட்டத்தின் பிரிவு 2 இன் அறிவித்தலுக்குப் பின்னர் செய்யப்படும் பிரிவு 4 இன் கீழான அறிவித்தலை வழங்கு மாறும் அதன் பின்னர் காணி உரிமையாளரின் ஆட்சேபனைகளுக்கு இடமளித்து, அதன் பிரகாரம் காணிச் சுவீகரிப்பு நடைமுறையை மேற்கொள்ளுமாறும் நீதியரசர் பிரதி சொலிசிற்றர் ஜெனரலிடம் கூறினார்.

எனினும் மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன், பிரிவு 2 அறிவித்தலையும் முழுக் காணிச் சுவீகரிப்பு நடைமுறையையும் ரத்துச் செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

பிரிவு 2 அறிவித்தலில், சுவீகரிக்கப்பட வேண்டிய காணி முறையாக அடையாளம் காணப்படவில்லை என்றும், குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அரசு உயர் பாதுகாப்பு வலயங்களே இல்லை என்று கூறியமைக்கு மாறாகச் செயற்படுவது, மனுதாரர்களின் நியாயமான எதிர்பார்ப்புக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.

மனுதாரர்கள் தமது மனுவில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டி இருப்பதாலும், அரச தரப்பு மேலும் சில விளக்கங்களை இலங்கை இராணுவத்திடம் இருந்து பெற கால அவகாசம் கோரியமையாலும் வழக்கு அடுத்த மாதம் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Related Posts