Ad Widget

காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது!

முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ யாழ்ப்பாணத்தைச் வந்தடைந்துள்ளது.

இந்த ஊர்வலம் இன்று (புதன்கிழமை) காலை யாழ்ப்பாணத்தைச் வந்தடைந்தது.

இதன்போது யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றி கொள்வோம் எனும் தொனிப்பொருளில் கையொப்பம் திரட்டும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் விநியோகித்திருந்தனர்.

கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை மீட்கக் கோரி, குறித்த வாகனப் பேரணியை நேற்று ஆரம்பித்திருந்தனர்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்திலிருந்து ஆரம்பமான இந்த வாகனப் பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததுடன், அங்கு கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து இப்பேரணி கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது. குறித்த பேரணி மன்னார் வவுனியா, நீர்கொழும்பு ஊடாக கொழும்பைச் சென்றடையவுள்ளது.

கொழும்பில் பல்வேறு தரப்பினருக்கும் மகஜர் கையளிக்க உள்ளதாகவும், மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts