காணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்!

காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து அல்லாமல் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்தே அரசாங்கம் வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் ஆகியன தொடர்பில் ஆராய்வதற்கான உயர் மட்டக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இக் கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரனிடம், படைத் தரப்பு தாம் வைத்திருந்த காணிகளை விடுவிக்கவே தற்போது பணம் கேட்பதாக ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த சுமந்திரன், “படையினர் வைத்திருந்த காணிகளில் அவர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்களைச் செய்த பணம் அரசாங்கத்திற்கே தான் சென்றிருக்கின்றன.

ஆகவே தற்போது காணிகளை விடுவதற்கு பணம் தேவைப்படுவதால் அந்தப் பணத்தையே அவர்கள் கோருகின்றனர். ஆகவே இடமாற்றத்திற்கான நிதியை அரசாங்கம் படைத்தரப்பினர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.

ஆனால் அது பாதுகாப்பு அமைச்சின் செலவீனத்தினூடாகவே தான் இடம்பெற வேண்டும். அதனை விடுத்து மீள்குடியேற்றத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து எடுக்கப்பட முடியாது.

ஏனெனில் கடந்த காலங்களில் அவ்வாறே எடுக்கப்பட்டிருக்கின்றனது. ஏனெனில் இது இராணுவத்தினருக்கான குடியேற்றமல்ல. அவர்களுக்கு இது இடமாற்றம் தான். ஆனால் இது மக்களுக்கான குடியேற்றம் ஆகவே மீள்குடியேற்ற நிதி மக்களிற்கான மீள்குடியேற்றத்திற்கே பயன்படுத்தப்பட வேண்டும்.” என கூறினார்.

Related Posts