தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படாது தொடர்ந்தும் அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவரும் நிலையில், மீண்டும் காணி அளவீடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எதிர்வரும் மே மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிட்ட அவர்,
எதிர்வரும் மாதமளவில் தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாவிட்டால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் காணி அபகரிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா குறித்த ஊடக சந்திப்பின்போது கூறினார்.