Ad Widget

காணிகளை அளவிட எம்மை வற்புறுத்தியே படையினர் அழைத்து வருகின்றனர்

எம்மை வற்புறுத்தியே காணிகளை அளவிட படையினர் அழைத்து வருகின்றனர் வலி.வடக்கு மக்கள் வாழும் முகாம் காணிகளை அளப்பதற்காக இராணுவத்தினர் தங்களை அதிகளவு பணம் கொடுத்தும், வற்புறுத்தியும் அழைத்து வருகின்றனர் என நிலஅளவையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இராணுவத்தினருடைய வற்புறுத்தலை மீறி காணி அளக்க வருவதற்கு மறுப்புத் தெரிவித்தால் தம்மை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் செயற்படுகின்றனர் எனவும் நிலஅளவையாளர்கள் மேலும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் வாழும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை, மடத்தடி முகாங் காணிகளை அளவிடும் பணிகளில் தற்போது இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு காணிகளை அளவிடும் பணிகளுக்கு அழைத்து வரப்பட்ட தனியார் நிலஅளவையாளர்களே இவ்வாறு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-

அவசர அவசரமாக வரும் இராணுவத்தினர் எங்களுடைய வேலைப் பளுக்களை பொருட்படுத்திக் கொள்ளாமல் தாம் அழைத்துச் சென்று காட்டும் காணிகளை நில அளவை மேற்கொண்டு தருமாறு கோருகின்றனர்.

இவ்வாறு நில அளவை செய்வதற்கு அக்காணியின் உறுதியுடன் உள்ள நில விளக்கப் படத்தினை கேட்டாலும் அது இல்லை என்றும் அயல் காணிகளின் எல்லைகளை வைத்து மேலோட்டமான நில அளவை செய்து தருமாறு கோருகின்றனர்.

நாங்கள் மறுப்புத் தெரிவித்தால் அதிகளவு பணம் தருவதாகக் கூறும் இராணுவத்தினர், தொடர்ந்து எங்களை வற்புறுத்துகின்றார்கள். இதனையும் மீறி நாம் காணி அளப்பதற்கு மறுப்புத் தெரிவித்தால் அச்சுறுத்தும் பாணியில் செயற்படுகின்றாரகள் என்றும் நிலஅளவையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் வாழும் முகாங்களின் காணி உரிமையாளர்களின் கடுமையான எதிர்பினையும் மீறி இராணுவத்தினால் காணிகளை அளவிடும் பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக இன்றும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை மற்றும் மடத்தடி முகாம் காணிகள் அளவிடும் பணிகள் நடைபெற்றுள்ளது.

Related Posts