Ad Widget

காணாமல் போனோர் எண்ணிக்கை: பிரஜைகள் குழு மீது ஆணைக்குழு சாடல்

மன்னார் மாவட்டத்தில் 1.47 லட்சம் பேர் காணாமல் போயிருப்பதாக சிற்சில சமயங்களில் கூறப்பட்டிருக்கின்ற போதிலும், காணாமல் போயிருப்பவர்கள் பற்றி விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அங்கிருந்து 312 முறைப்பாடுகளே கிடைத்திருப்பதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம மடு பிரதேச செயலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார்.

missing-people-president

இதேவேளை, வடமாகாணத்தில் 3300 பேர் காணாமல் போயிருப்பதாக மன்னார் பிரஜைகள் குழுவினர் எங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால், அந்த அளவிற்கு பொது மக்களிடம் இருந்து எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

முன்னார் மாவட்டத்தில் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின்படி, விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களில் 150 பேர் கடந்த நான்கு நாட்களில் இந்த ஆணைக்ழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்திருக்கின்றார்கள்.

இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின் பிரகாரம், சாடசியமளித்தவர்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இந்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று பொதுமக்கள் நம்பிக்கை கொண்டிருப்பதையே இது காட்டுகின்றது என்று ஆணைக்குழுவின் தலைவர் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மன்னார் பிரஜைகள் குழு மீது ஆணைக்குழு தலைவர் குற்றச்சாட்டு
கிராம ரீதியில் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பில் தகவல் வெளியிட்டு காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பான முறைப்பாட்டாளர்களை விசாரணைக்கு முற்படுத்துமாறு கேட்டிருந்த போதிலும் மன்னார் பிரஜைகள் குழுவினரால் அதனைச் செய்ய முடியவில்லை. அவர்கள் சொல்வதைச் செய்வதில்லை என்றும் ஆணைக்குழுவின் தலைவர் பரணகம குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

எங்களுக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கையும், சர்வதேச செஞ்சிலுவைக்குழு திரட்டியுள்ள தகவல்களின் எண்ணிக்கையும் சமமாக இருப்பதாகவும் பிரஜைகள் குழுவினர் காணாமல் போயிருப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கூறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரஜைகள் குழு மறுப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருப்பது குறித்து மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் இம்மானுவேல் ஜெபமாலையிடம் கேட்டபோது,

மன்னார் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் காணாமல் போனதாக எந்தச் சந்தர்ப்பத்திலும் எவரும் கூறவில்லை என்று மறுத்தார்.

இறுதி யுத்தம் நடைபெற்றபோது வன்னிப்பகுதிக்குள் இருந்த மக்கள் தொகை குறித்த அங்கிருந்த அரச அதிகாரிகளின் தகவல்களுக்கும், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் யுத்த பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என்று அரசாங்கம் தெரிவித்திருந்த எண்ணிக்கைக்கும் இடையில், ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு என்ன நடந்தது, அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை.

இவ்வாறு பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பில் பாரிய வித்தியாசம் இருப்பதென்பது இறுதி யுத்தத்தின்போது அந்த மக்களைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதுதான் விடயம் , மன்னார் மாவட்டத்தில் இருந்து அவர்கள் காணாமல் போனதாக எவரும் கூறவில்லை எனக் கூறினார்.

வடமாகாணத்தில் கிராமங்கள் தோறும் தாங்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றிருந்த காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பாக 3300 விண்ணப்பங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருந்தோம். இது காணாமல் போனவர்களின் உண்மையான எண்ணிக்கை இல்லை என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். எனினும் மக்கள் தமக்கு முறையிடவில்லை என்று ஆணைக்குழு கூறுவது அர்த்தமற்றது என்றார் அவர்.

அதேநேரம் உள்ளுர் விசாரணை பொறிமுறையில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே இந்த ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பதற்கு வந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது என்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் ஜெபமாலை கூறினார்.

Related Posts