Ad Widget

காணாமல்போனோர் ஆணைக்குழு; மன்னார் அமர்வில் 224 பேர் சாட்சியம்

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 6 ஆவது அமர்வு விசாரணைகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 224 பேர் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு.குணதாஸ தெரிவித்தார்.

missing_people

வெள்ளியன்று காலை மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் இந்த அமர்வு ஆரம்பமானது. சனிக்கிழமையும் இன்றும் இந்த அமர்வு அங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நாள் மன்னார் பிரதேச செயலகத்திலும் நான்காவது நாள் மடு பிரதேச செயலகத்திலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.

முதல் நாள் நடைபெற்ற விசாரணைகளில் அதிகமானோர் தங்களின் பிள்ளைகள் விடுதலைப்புலிகள் பலவந்தமாக ஆட்சேர்ப்பதற்காகப் பிடித்துச்சென்றதன் பின்னர் காணாமல் போயிருப்பதாகவும், பலர் தங்களுடைய பிள்ளைகள் அங்கிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வந்தபின்னர் காணாமல் போயிருப்பதாகவும் தமது சாட்சியத்தில் தெரிவித்தனர்.

இராணுவத்தினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னர், தமது பிள்ளைகள் வீடு திரும்பாமல் காணாமல் போயிருப்பதாக சிலர் கூறினர்.

தமது வீடுகளுக்கு வந்து கடத்திச் செல்லப்பட்ட அல்லது பிடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகளைக் காணவில்லை என்றும் மற்றும் சிலர் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆணைக்குழுவின் விசாரணைக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு – அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்டிருக்கின்றது.

தமது விசாரணைக்காலம் நீடிக்கப்பட்டிருப்பதனால், இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாம் என்று அச்சம் கொண்டிருந்தவர்களுக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது என்று ஆணைக்குழுவின் செயலாளர் குணதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts