Ad Widget

காங்சேன்துறை சிமெந்து தொழிற்சாலை முழுமையாக பாதுகாப்பு அமைச்சின் வசம்!

காங்கேசன்துறையில் உள்ள இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 104 ஏக்கர் காணியுடன் கூடிய காங்கேசன் சிமெந்து தொழிற்சாலையின் அசையும், அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்துள்ளது.

KKS

யாழ்ப்பாணத்தில் படையினரின் தேவைக்காக வலி.வடக்கு உட்பட யாழ்ப்பாணம் முழுவதும் பல இடங்களில் காணிகளை சுவீகரிக்கும் நோக்கத்தின் ஒரு அங்கமாகவே இந்தச் சுவீகரிப்பும் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை முழுமையாக பாதுகாப்பு அமைச்சால் சுவீகரிக்கப்பட்ட செய்தியை இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனம் நேற்று விடுத்த அறிக்கையொன்றில் உறுதிசெய்தது. ஆனால் இந்தச் சுவீகரிப்பு எதற்காக இடம்பெற்றது எனத் தமக்குத் தெரியப்படுத்தவில்லை என கூட்டுத்தாபனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சுவீகரிக்கப்படும் காணி மற்றும் கட்டங்களுக்கான இழப்பீட்டை தமது கூட்டுத்தாபனத்துக்கு வழங்க பாதுகாப்பு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சால் சுவீகரிபட்டுள்ள நிலையில் அதன் பணியாளர்கள் அனைவரும் தமக்கான சுயவிருப்பு ஓய்வுக்காலப் பணிக்கொடையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

குறித்த காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை மீளவும் இயங்க வைக்கும் நோக்கில் சிறிது காலத்துக்கு முன்னர் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. மேலும் தனியார் ஒருவருக்கு இதனைக் குத்தகை அடிப்படையில் சிமெந்து உற்பத்திக்காக கொடுப்பதெனவும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் குடாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுப்பைக் கருதியும், நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டும் இந்த முயற்சிக்கு எதிர்ப்புக்கள் எழுந்தன.

இதனால் அந்த முயற்சி தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts