Ad Widget

காங்கேசன்துறை கடற்பரப்பில் மேலும் 4 கி.மீற்றரை ஆக்கிரமித்தது கடற்படை! கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

காங்கேசன்துறை துறைமுகத்தின் பாதுகாப்புக்கு எனக் கூறி மேலும் 4 கிலோமீற்றர் நீளமான கடற்பரப்பை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் 650 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.வலி. வடக்குப் பிரதேசத்தில் நிலப்பரப்பை உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.

இந்நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தின் பாதுகாப்புக்கு எனக்கூறி சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் நீளமான பகுதியை ஆக்கிரமித்திருந்தனர்.

இதன் கரைப் பிரதேச எல்லையாக கீரிமலை கேணிக்கு அண்மையாக கடற்படை முகாம் ஒன்றை அமைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் அந்த முகாமை 4 கிலோமீற்றர் தூரம் தள்ளி அமைத்துள்ளனர். அத்துடன் படகுகள், வள்ளங்கள் எதுவும் அப்பகுதிக்குள் நுழையாதவாறு ‘போயோ’ தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் சேந்தாங்குளம், வலித்தூண்டல், சீந்துப்பத்தி, போயிட்டி, ஊறணி பிரதேசத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மாதகல் பிரதேசத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் திடீர் தடை குறித்து கடற்றொழிலாளர் சங்கங்கள் கடற்படையினரைத் தொடர்புகொண்டு கேட்டபோது துறைமுகப் பாதுகாப்புக் கருதி அப்பகுதி சுவீகரிக்கபட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இளவாலைப் பொலிஸிடமும், சிவில் பாதுகாப்புக் குழுவிடமும் கடற்றொழிலாளர் சங்கங்கள் முறையிட்டுள்ளனர்.

மேலும் கடற்படையினர் மேற்கொண்டுள்ள இந்தத் திடீர் தடை உத்தரவால் கடற்றொழிலாளர்கள் பெரும் கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

Related Posts