Ad Widget

கழிவகற்றலை நிறுத்திய நல்லூர் பிரதேச சபை

நல்லூர்ப் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று புதன்கிழமை (27) முதல் கழிவகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதென நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் பா.வசந்தகுமார் புதன்கிழமை (27) தெரிவித்தார்.

கழிவுப் பொருட்களை போடுவதற்கான இடம் இல்லாத காரணத்தால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நல்லூர்ப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படும் கழிவுகள் இதுவரைகாலமும், கோண்டாவில் டிப்போவிற்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலேயே போடப்பட்டு வந்தன.

இந்நிலையில், மேற்படி காணியில் கழிவுகள் நிரம்பியதாலும், மேலும் கழிவுகள் போடுவதற்கு காணி உரிமையாளர் மறுத்தமையால் அங்கு கழிவுகள் போட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, ஏ – 9 வீதி, அரியாலை பகுதியில் அன்பளிப்பாக கிடைத்த 2 ஏக்கர் காணியை கழிவுகள் கொட்டுவதற்கும் தொடர்ந்து அவற்றை பசளையாக்கும் திட்டமும் 2 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

ஆயினும், அப்பிரதேசம் நன்னீர் சேகரிப்புத் திட்டத்தின் கீழ் வரும் பிரதேசமென்றும் அந்தப் பகுதியைச் சூழ விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றமையால் அங்கு கழிவுகளைப் போடுவதற்கு கமநல சேவைகள் திணைக்களமும் வடமாகாண விவசாய அமைச்சும் மறுத்திருந்தது.

இதனால், அகற்றிய கழிவுகளை போடுவதற்குரிய இடம் இல்லாமல் போனது. இதனையடுத்து, இன்று புதன்கிழமை (27) முதல் கழிவகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என அவர் கூறினார்.

இருந்தும், சந்தைக் கழிவுகள் கோண்டாவில், காரைக்காடு இந்து மயானத்திற்கு அருகில் உரம் தயாரிப்பதற்கு தேவையென்பதால் சந்தைகளிலுள்ள கழிவுகள் மட்டும் அகற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் கருத்து கூறுகையில்,

‘விவசாய நிலத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கே தடையிருக்கின்றது. இந்நிலையில் நல்லூர் பிரதேச சபை, அரியாலை பகுதியில் கழிவுகள் கொட்டுவதனால் அது அப்பகுதி விவசாயத்தை கடுமையாகப் பாதிக்கும்.

மேலும், யாழ்ப்பாணத்திற்கான நன்னீர்த் திட்டத்தின் கீழ் மேற்படி பிரதேசமும் உள்ளடங்குவதால் அதில் கழிவுகள் கொட்டமுடியாது.

இதனை கமநல சேவைகள் திணைக்களம் தடை செய்திருந்தது. அது தொடர்பில் கமநலசேவைகள் திணைக்களம் எமது அமைச்சுக்கும் தெரியப்படுத்தியிருந்தது எனத் தெரிவித்தார்.

Related Posts