Ad Widget

கமல், அரசியலில் குதிப்பாரா? ரஜினிகாந்த் மவுனம்!

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு பிறகு ரஜினியும், கமலும் தமிழ் திரைஉலகில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

இவர்களில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற கோ‌ஷம் நீண்ட காலமாகவே அவரது ரசிகர்கள் மத்தியில் பிரதானமாக இருந்து வருகிறது.

“தலைவா வா… தமிழகத்துக்கு தலைமையேற்க வா” என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் ஒட்டி வருகிறார்கள். ஆனால் ரஜினியின் மனதில் என்னவோ, அரசியல் ஆசை மட்டும் ஓட்டாமலேயே இருந்து வருகிறது.

1996-ம் ஆண்டு மூப்பனார் தனிக்கட்சி தொடங்கிய போதே ரஜினிகாந்துக்கு அரசியல் வலை விரிக்கப்பட்டது. அப்போது அவர் அதில் சிக்கவில்லை. தற்போது பா.ஜனதா கட்சி அந்த வலையை கையில் எடுத்து ரஜினிகாந்தை நோக்கி வீசி இருக்கிறது.

ஆனால் அவர் சிக்காமலேயே நழுவி வருகிறார். இதனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்கிற கேள்வி மதில் மேல் பூனையாகவே தொடர்ந்து வருகிறது.

அதே நேரத்தில் நடிகர் கமல்ஹாசனோ, எப்போதுமே அரசியல் களத்தில் இருந்து விலகியே இருந்து வந்துள்ளார். ஆனால் சமீப காலமாக கமலின் அரசியல் விமர்சனங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொங்கி எழுந்த மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து கமல் தெரிவித்த கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்றது. மாணவர்களின் போராட்டகளத்துக்கு நடிகர்கள், யாரும் செல்ல வேண்டாம். அது மாணவர்களின் போராட்டமாக மட்டுமே இருக்கட்டும் என்று கூறியதுடன், கடைசி வரை மாணவர்களின் போராட்டகளத்துக்கு செல்லாமலேயே கமல் தவிர்த்து விட்டார்.

இதன் பின்னர் தொடர்ச்சியாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அரசியல் தொடர்பான கமலின் இந்த கருத்துக்கள் பொதுமக்களை மட்டுமின்றி, அரசியல்வாதிகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கமலின் கருத்துக்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இப்படி அனைவராலும் கமலின் கருத்துக்கள் ஆர்வமுடன் கவனிக்கப்பட்டு வருகின்றன.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு

முதல் – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஓ.பன்னீர் செல்வம் தான் மிரட்டப்பட்ட தாகவும், அதன் காரணமாகவே ராஜினாமா செய்தேன் என்றும் தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதற்கு ஆதரவு தெரிவித்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டு இருந்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதையும் கமல் விமர்சித்து இருந்தார். இப்படி தமிழக அரசியலின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கமல் காரசாரமாகவே விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு கமல் அளித்த பேட்டியில் தமிழக சட்டசபைக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் சட்டசபையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருப்பதை மறைமுகமாக சாடியுள்ளார் கமல். மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள் தேர்தல் முடிந்ததும் ஆளே மாறி விடுகிறார்கள். இது சார்ந்த கோபம் மக்களிடம் அதிகரித்துள்ளது.

சட்டப்பேரவையை சுத்தம் செய்ய மறுதேர்தல் நடத்த வேண்டும். மறுதேர்தல் என்பது மக்களுக்கு செலவு வைக்கக்கூடிய ஒன்றுதான். தரையில் பாலை கொட்டி விட்டோம். அதனை சுத்தம் செய்து விட்டு மீண்டும் பால் கரக்க வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது என்று கூறி இருக்கிறார்.

அரசியலுக்கு வர எனக்கு பயமாக இருக்கிறது. என்னை போன்ற கோபக்கார அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு வேண்டாம் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் இது போன்று காரசாரமான விமர்சனங்களை கமல் இதற்கு முன்பு எப்போதுமே வைத்ததில்லை. தற்போது தான் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

கமலின் பேட்டியில், அரசியலுக்கு வர பயமாக இருக்கிறது என்றுதான் கூறி இருக்கிறார். வரமாட்டேன் என்று தெரிவிக்கவில்லை. எனவே கமல் அரசியலில் குதிப்பாரா? என்கிற கேள்வி அனைவரது மனதிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியல் களத்தில் கமலின் கருத்துக்கள் கார சார விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போதை அரசியல் சூழல் பற்றி ரஜினிகாந்த் எந்த விதமான கருத்துக்களையும் பதிவிடாமல் மவுனம் காத்து வருகிறார்.

அதே நேரத்தில் அவரது ரசிகர்களோ, ரஜினி அரசியலுக்கு வருவதற்கு இதுவே சரியான நேரம் என்று கூறி மீண்டும் போஸ்டர்களை ஒட்டி அழைப்பு விடுத்து வருகிறார்கள். ஆனால் எப்போதும் போலவே ரஜினியின் மவுனம் நீடித்துக் கொண்டே செல்கிறது.

Related Posts