Ad Widget

கமலேந்திரனின் பிணை நிபந்தனையில் தளர்வு

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து நின்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி க.சிவபாதசுந்தரம் வியாழக்கிழமை (26) அனுமதியளித்துள்ளார்.

Kamal

அத்துடன் மாதத்தின் முதலாம் மற்றும் இறுதி சனிக்கிழமைகளில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு சென்று கையொப்பமிடவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரன், யாழ்ப்பாணத்தில் இருக்க முடியாது, வாரத்தில் ஒரு தினம் வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிடவேண்டும், அனுமதியில்லாமல் எக்காரணம் கொண்டும் வெளிநாடு செல்ல முடியாது என்ற நிபந்தனைகள் கொடுக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கரால் கமலேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

கமலேந்திரன் தொடர்பான வழக்கு மேல் நீதிமன்றத்தில், வியாழக்கிழமை (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்குமாறு கமலேந்திரன் தனது சட்டத்தரணியூடாக கோரியிருந்தார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி கொழும்பில் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர். அத்துடன் றெக்சிஸனின் மனைவி அனித்தா மற்றும் மேலும் ஒரு இளைஞன் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலை தொடர்பிலான வழக்கு ஊர்காவற்றுறையில் கடந்த 1 வருடத்துக்கும் மேலாக இடம்பெற்று மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கமலேந்திரன் மற்றும் அனித்தா ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்.மேல் நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்து பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts