Ad Widget

கமலுடன் பணிபுரிந்த அனுபவம் : சுகா

தூங்காவனம் படத்துக்கு வசனம் எழுதிய எழுத்தாளரும் இயக்குநருமான சுகா, கமலுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.

suga - thoongavanam

அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘போன வருடம் தீபாவளியன்று கேரளத்தின் தொடுபுழாவில் இருந்தேன். ‘பாபநாசம்’ படப்பிடிப்பின் பரபரப்பில் தீபாவளி மறந்து போனது. இந்த வருடம் தீபாவளிக்கு நான் வசனம் எழுதியிருக்கும் ‘தூங்காவனம்’ திரைப்படம் வெளியாகிறது. பதின்வயது தீபாவளி சந்தோஷங்களுக்குப் பிறகு தீபாவளி உட்பட எந்தப் பண்டிகையிலும் நாட்டமில்லை. அவை குறித்த விசேஷமான நினைவுகளுமில்லை. ஆனால் போன வருடத்து தீபாவளியையும், இந்த வருடத் தீபாவளியையும் மறக்க முடியாதுதான்.

தெளிவாக எழுதப்பட்ட திரைக்கதையை, படப்பிடிப்புக்கு முன்பாகவே எல்லா நடிக, நடிகையரையும் அமர வைத்து, அவர்கள் ஏற்று நடிக்க இருக்கிற கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் பேச வேண்டும், நடக்க வேண்டும், நடிக்க வேண்டும் என்பதை விளக்கும் விதமாக திரைக்கதையை வாசித்துக் காண்பித்து, பின் படப்பிடிப்புக்குக் கிளம்பிய படம், ‘தூங்காவனம்’. அதனாலேயே எந்தவிதமான குழப்பமுமில்லாமல் படப்பிடிப்பு அத்தனை சந்தோஷமாக நடந்தது. கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கும் மேலாக கமல்ஹாசன் அவர்களிடம் திரைக்கலை பயின்ற இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா, இந்தியாவின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சானு வர்கீஸ், முறையான இசைப் பயிற்சியும், அசாத்திய கற்பனை வளமும் கொண்ட இசையமைப்பாளர் ஜிப்ரான், மிகச் சிறந்த படத்தொகுப்பாளர் ஷான் முகம்மது என திறமைசாலிகளின் கூட்டணியில் உருவான திரைப்படம், ‘தூங்காவனம்’. ஒரு ஆக்‌ஷன் திரில்லருக்கு மிகக் குறைவான வசனங்களே தேவைப்படும். அந்தக் குறைவான வசனங்களை எழுத என்னைத் தேர்ந்தெடுத்தார் ‘அண்ணாச்சி’ கமல்ஹாசன்.

‘இது நான் எழுதக் கூடியதா எனக்குத் தோணலியே!’

‘உங்களுக்கு எதுவும் எழுத வரும். அது உங்களை விட எனக்குத் தெரியும்’ என்று என் வாயை அடைத்தார்.

தனது மூத்த மாணவருடன், இளைய மாணவன் இணைந்து பணியாற்றிய திரைப்படத்தைப் பார்க்க ‘வாத்தியார்’ பாலு மகேந்திரா இல்லையே என்கிற வருத்தம் எனக்கு இல்லாமலில்லை’ என்று எழுதியுள்ளார்.

Related Posts