Ad Widget

கட்சி மாறிய தம்பதி வீட்டின் மீது தாக்குதல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்த கணவன் மனைவியான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை (30) இரவு தாக்குதல் நடத்தப்பட்டதாகபருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் நடராசா நிறஞ்சன், அவரது மனைவியான பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் நிறஞ்சன் ஜெயசாந்தி ஆகியோரது வீடே தாக்குதலுக்குள்ளானது.

வீட்டு வளாகத்தில் நுழைந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டின் வெளியில் இருந்த பொருட்களை அடித்து நொருக்கியபோது, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் அவ்விடத்துக்கு வந்தபோது, தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிவிட்டனர்.

இதனையடுத்து, உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரண்டு உறுப்பினர்களும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அரச தொலைக்காட்சியொன்றின் ஊடாக தாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாறுவதாக தெரிவித்திருந்ததுடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவையும் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts