Ad Widget

கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய இளைஞர்களை விடுவிக்க அழுத்தம் – சுமந்திரன் எம்.பி. விளக்கம்

“செம்பியன்பற்றுப் பகுதியில் சிவில் உடையில் கைத் துப்பாக்கியுடன் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய பொலிஸாரை இராணுவத்தினரிடம் பிடித்துக் கொடுத்த உள்ளூர் இளைஞர்கள் மீதே பொலிஸார் கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டை சுமத்திக் கைது செய்தனர். அந்த இளைஞர்கள் தொடர்பில் நடந்த சம்பவத்தை பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கியிருந்தேன். அத்துடன், அந்த இளைஞர்களை விடுவிக்கவும் கோரியிருந்தேன்”

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய புள்ளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய இளைஞர்களை விடுவிக்க அழுத்தம் வழங்கினார் என்று பொலிஸாரால் வெளிக்கொணரப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழில் இன்று பத்தி எழுத்து வரையப்பட்டிருந்தது.

அதுதொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்ததாவது:

செம்பியன்பற்றுப் பகுதியில் சிவில் உடையில். துப்பாக்கியுடன் நின்றவர்களை அந்தப் பகுதி இளைஞர்கள் பிடித்து பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அதனால் சம்பந்தப்பட்ட இளகஞர்கள் கஞ்சா கடத்தியதாக சிவில் உடையில் வந்தோர் தகவல் வெளியிட்டனர்.

செம்பியன்பற்றுப் பகுதியில் கடந்த 4ஆம் திகதி ஓர் நிகழ்விற்கு செல்வதற்கு என்னால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதேநேரம் 3ஆம் திகதி மாலை அந்தப் பகுதியில் சிலர் சிவில் உடையில் சந்தேகத்திற்கு இடமாக நீண்ட நேரமாக நடமாடினர். அதனை அவதானித்த அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர் அவர்களை அணுகி விசாரித்தபோது, தாங்கள் பொலிஸார் எனக் கூறியுள்ளனர்.

இதன்போது உள்ளூர் இளைஞர்கள் பொலிஸார் எனக் கூறியவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர். அதன்போது சிவில் உடையில் நின்றோர் கைத் துப்பாக்கிகளை காண்பித்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த இளைஞர்கள் துப்பாக்கியை காண்பிக்காது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர். அதனையடுத்து அங்கே சிவில் உடையில் நின்ற ஆயுததாரிகள் வாகனத்தில் ஏறி அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றனர். இளைஞர்கள் சிலர் அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தனர். அதேநேரம் சம்பவம் தொடர்பில் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கும் தகவல் வழங்கினர். இதனையடுத்து இராணுவத்தினர் அந்த வாகனத்தை விரட்டிப் பிடித்தனர்.

அவ்வாறு பிடித்தபோது சிவில் உடையில் ஆயுதங்களுடன் இருந்த அனைவரும் பொலிஸார் என இராணுவத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். இருப்பினும் பளைப் பொலிஸாருக்கு வழங்கிய நகவலின் பிரகாரம் பளைப் பொலிஸாரும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர். அங்கே சிவில் உடையில் ஆயுதங்களுடன் இருந்த பொலிஸார் சீருடைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சிவில் உடைப் பொலிஸார், தம்மைப் பின்தொடர்ந்து வந்த கிராம இளைஞர்கள் தங்களைத் தாக்கியதாகவும் தாம் சிறப்புப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் எனப் பளை பொலிஸாரிடம் தெரிவித்தனர். இதனால் பின்தொடர்ந்து சென்றவர்களிலும் 4 இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டுவந்த நிலையிலேயே நான் பிரதிப் பொலிஸ்மா அதிபரைத் தொடர்பு கொண்டு அவர்களை விடுவிக்குமாறு கோரினேன். இந்த இடத்தில் அந்தச் சம்பவத்துடன் பலர் தொடர்புபட்டிருந்தனர். தற்போது சில முரணான தகவல்களும் பொலிஸாரினால் வெளியிடப்படுகின்றது- என்றார்

Related Posts