Ad Widget

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஓர் இனவாதி : அமைச்சர் ருவன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை ஒரு இனவாதி என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அழைத்துள்ளார்.

ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று யாழ்ப்பாணத்தில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர் என்றும், எழுக தமிழ் பேரணியை ஏற்பாடு செய்த காரணத்திற்காகவே அவர் திட்டமிடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சாட்டியிருந்தது.

இது தொடர்பில் நேற்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்டபோதே அமைச்சர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை ஒரு இனவாதி என்றும் அவ்வாறானவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை எனவும் கூறியிருக்கிறார்.

“கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு பதில் கருத்து கூறவதற்கான அவசியம் எனக்கில்லை. வெறுமனே அரசியல் நோக்கத்தில் அவர் கருத்துக்களை வெளியிடுகின்றார். எனவே இனவாதத்தை பரப்பிவரும் அவருக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கில்லை” – என்றார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர், யாழ்ப்பாணத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் ஆவா குழுவிற்கும், இராணுவத்திற்கோ அல்லது முன்னாள் போராளிகளுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

“ஆவா குழுவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. எனினும் யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொண்டால் முன்னாள் போராளிகள் அங்கு உள்ளனர். அவர்கள் இந்தக் குழுவில் தொடர்புபட்டுள்ளதாக கூறினாலும், இராணுவமோ, முன்னாள் போராளிகளோ இதில் சம்பந்தப்படவில்லை என்பதே எனது கருத்தாகும்” -என்றார்.

எவ்வாறாயினும் ஆவா குழுவை இராணுவத்தினரே இயக்குவதாக ஒருதரப்பினரும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளே ஆவா குழுவினர் என மற்றுமொரு தரப்பினரும் குற்றஞ்சாட்டிவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts