Ad Widget

ஓய்வூதியத்தை எண்ணி செயற்படுபவர்களால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது: ரெஜினோல்ட் குரே

அரசாங்க வேலையில் இணைந்து கொள்ளும் அனைவரும் பின்னர் ஓய்வூதியத்தை எண்ணி பணி புரிவதனால் மக்களுக்கு நல்ல சேவையினை வழங்க முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்- கைதடி பகுதியில் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

“பெரும்பாலானோர் நிரந்தர அரசாங்க வேலை வேண்டுமென்றே ஆசைப்படுகின்றனர். காரணம் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும்போது அதிகளவான வேலைகளை செய்ய வேண்டும். சிலவேளை முறையாக வேலை செய்யாவிடின் வேலையிலிருந்து நீக்கி விடுவார்கள்.

ஆனால் அரச சேவையில் அவ்வாறு இல்லை. பல சலுகைகள் கிடைக்கின்றது. அதனால் தான் அனைவரும் நிரந்தர அரசாங்க வேலை வேண்டுமென எண்ணுகின்றனர்.

அந்தவகையில் திறமையானவர்கள் நல்ல வேலை தெரிந்தவர்கள், கெட்டிக்காரர்கள் அரசாங்க வேலைக்கு வருவதில்லை. நான் அதனை பார்த்திருக்கின்றேன்

இருப்பினும் பெரும்பாலானோர் ஓய்வூதியம் கிடைக்கும் என்ற ஒரு காரணத்திற்காக அரசாங்க வேலையை விரும்புகின்றார்கள்.

ஆகையால் அவ்வாறில்லாமல், அரசாங்க வேலையில் இணைந்து கொள்ளும் அனைவரும் மக்களுடன் சினேகபூர்வமாக சேவை செய்ய வேண்டும்.

மேலும் உங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அம்மக்களின் பணம் என்பதை கருத்திற்கொண்டு உணர்வூபூர்வமாக சேவையாற்ற வேண்டும்” என ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.

Related Posts