வடமாகாணத்தில் ஒலிபெருக்கிப் பாவனையினைக் கட்டுப்படுத்தும் முகமாக வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு புதிய நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒலிபெருக்கியினைப் பயன்படுத்துபவர்கள் ஏனையோரது உடல் உள மற்றும் கல்வி நடவடிக்கையினைப் பாதிக்காத வகையில் குறிக்கப்பட்ட நேர அட்டவணைகளைக் கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மைக்காலமாக ஒலிபெருக்கி பாவனை அதிகரித்துள்ள நிலையில் ஒலிபெருக்கிப் பாவனையினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று ஏ 9 வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலந்துரையாடலை அடுத்தே விவசாய அமைச்சர் இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் வடக்கு மாகாணத்தில் புதிய நடைமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணிக்கு உட்பட்ட பகுதியில் ஒலிபெருக்கி பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுபோல வெள்ளி , சனி ஆகிய தினங்களில் இரவு ஒரு மணி வரை பயன்படுத்த முடியும் என்றும் ஞாயிறுக்கிழமை இரவு 12.30 மணி வரை ஒலிபெருக்கியை பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அனுமதி வழங்கப்பட்ட நிகழ்வுகளில் குறித்த இடத்திற்கு மாத்திரம் ஒலி பெருக்கிப் பெட்டியை பயன்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
மேலும் திருவிழா காலங்களில் ஆலய வீதிகளில் ஒலிபெருக்கி அமைப்பிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதத் தடை என தவறான கருத்தைக் கொண்டிருக்க வேண்டாம். இது ஒட்டுமொத்தமானவர்களது உடல் , உளத்திலும் தாக்கம் ஏற்படுத்துகின்றது. எனவே இதனைக் குறைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
மேலும் ஐஸ்கிறீம் வான், அதிஸ்டலாப சீட்டிலுப்பு வாகனம், விளம்பர வாகனம் தொடர்பிலும் இன்று கலந்துரையாடப்பட்டது. அவர்களையும் அழைத்துப் பேசி மெல்லிசைப் பாடல்களை பாடவிடுவதன் மூலம் சத்தத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களுக்கு இன்னும் 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் மதகுருமார், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர், பொலிஸார் , உள்ளூராட்சி திணைக்களத்தினர் , கலாச்சார உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.