Ad Widget

ஒற்றையாட்சிக்குள் தீர்வு ஏற்படமுடியாது; இரா.சம்பந்தன்

எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சமஷ்டியைக் கோரவில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர உட்பட சில முக்கியமான அரசாங்க தரப்பினர் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டுக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கணித்திருந்தார்.

இவ்விரு விடயங்கள் தொடர்பாக வினவியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது,

தற்போது சில முன்னேற்றகரமான விடயங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அதனை குழப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. வீணான சர்ச்சைகளை ஏற்படுத்துவதற்குரிய காலம் இதுவல்ல. நாங்கள் அந்த விடயங்களை பெரிதுபடுத்துவதற்கு விரும்பவில்லை.

தமிழீழத்தை சம்பந்தன் கோரவில்லை சமஷ்டியை சம்பந்தன் கோரவில்லை என்றே கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் ஒற்றை ஆட்சிக்குள் தேசிய பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு இணங்கிவிட்டோம் எனக் கூறவில்லை. அப்படியென்றால் அதன் அர்த்தம் என்ன?

நாங்கள் எத்தனையோ தடவைகள் தென்னிலங்கை தலைவர்களை சந்தித்த போது ஒற்றையாட்சிக்குள் எமது மக்களுக்கான தீர்வு ஏற்படமுடியாது என்பதை தெளிவாக கூறியிருக்கின்றோம். எமது மக்களுக்கு ஏற்புடைய நியாயமான தீர்வொன்று வழங்கப்படவேண்டும் எனவும் அவர்களிடத்தில் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.

முக்கியமாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை சிங்கள மக்களும் ஏற்றக்கொள்ளவேண்டும். சிங்கள மக்களும் புரிந்து கொண்டதொரு தீர்வே நிரந்தரமாக இருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றோம்;. அதற்காகவே சர்ச்சைகளை ஏற்படுத்தாது சாதுரியமாக கருமங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றபோது, முறையாக கருமங்கள் நடைபெறும் இடத்து தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு 2016 இறுதிக்குள் கிடைக்கும் என எனது கணிப்பை கூறியிருந்தேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், இணைந்து ஒரு கூட்டு அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன.

எமது உதவியுடன் பாராளுமன்றத்தில் மூண்றிரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்வதற்கான வசதியுள்ளது. இது நீடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில், மாதங்களில் சில தாமதங்கள் காணப்படுகின்றபோதும் அரசியலமைப்பு செயற்பாடுகளில் ஆனால் முன்னேற்றகரமான விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

பாரளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளது. புதிய அரசியல் சாசனத்தை இயற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆரசியல சாசன சபையால் வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வழிநடத்தல் குழுவால் ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அதன் அறிக்கைகள் பூரணமடைந்து வழிநடத்தல் குழுவிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.

வழிநடத்தல் குழுவானது 45தடவைகள் கூடியிருந்தது. வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தயாராக இருந்தபோதும் சில காரணங்களுக்காக அந்த கருமம் தாமதமாகியுள்ளது.

எவ்வாறாயினும் இன்னும் சொற்ப காலப்பகுதியில் அந்த விடயங்கள் முறையாக நடைபெற்று அறிக்கை வெளிவரவுள்ளது. 9ஆம், 10ஆம், 11ஆம் திகதிகளில் விவாதங்களும் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

ஆகவே 2016ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் எதுவுமே நடைபெறமுடியாது என கூறிவிடமுடியாது. முன்னேற்றகரமான விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் நான் கூறிய கணிப்பின் பிரகாரம் கருமங்கள் நடைபெறுவதற்கு சில தமாதங்கள் காணப்பட்டிருக்கின்றன. அவை விரைவில் நடைபெறவேண்டும். அதற்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அதேநேரம் அரசியல் சாசன சபையின் முன்னாள் கருமங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் புதிய அரசியல் சாசனம் மக்களுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மக்களிடத்தில் சமர்ப்பிக்கபடவுள்ளது.

புதிய அரசியல் சாசனம் பெரும்பான்மையான மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதாக இருந்தால் அது பெருவாரியான மக்களால் அங்கீககரிக்கப்படவேண்டும்.

அதனைப் பெற்றுக்கொள்வதற்காக எமது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய விட்டுக்கொடுப்பில்லாது எமது மக்களின் உரிமைகளை பதுகாக்கக் கூடிய வகையில் கருமங்கள் அனைத்தும் முன்னெடுக்கப்படவேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Related Posts