Ad Widget

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றமை கண்டிக்கத்தக்கது

கடந்த ஆண்டு இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றதைக் கண்டித்தும் இவ்வாண்டு நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை குறிப்பிட்டும் யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வெள்ளிக்கிழமை (27) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

CVK-Sivaganam

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘கடந்த ஆண்டு இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்கள் யாவும் அனேகமாக முரண்பாடுகளுடன் கூடியதும் இக்குழுவின் கௌரவத்துக்கு பங்கம் ஏற்படுத்தக்கூடியதுமான சம்பவங்களைக் கொண்டதாக இருந்தமை வருத்தத்துக்குரியது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற அசம்பாவிதங்கள் மிகவும் கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

அந்த அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணம், பங்குபற்றுனர் பட்டியல் முறை ஒழுங்காக அமையாததே. உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் சம்பந்தமாகவே குழப்பம் காணப்படுகின்றது.

உள்ளூராட்சி மன்றங்களைப் பொறுத்தவரை எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி என்று ஒன்று இருக்கவில்லை. அப்படியிருப்பது உள்ளூராட்சி தத்துவத்துக்கே மாறானது. எனவே உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மட்டும் அழைப்பது பொருத்தமானது.

மேலும் அழைக்கப்படும் அரச அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்கள் மிகவும் அசௌகரியத்துக்கு உள்ளாவது காணப்படுகின்றது.

இவர்களிலும் சிரேஷ்ட அதிகாரிகளை மட்டும் அழைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்பட வேண்டும். அல்லது அவர்களுக்குரிய வசதிகள் வழங்கப்பட வேண்டும். ஒரு முன்னைய பொதுச்சேவை அதிகாரி என்ற வகையில் இது பற்றி நான் சங்கடப்பட்டிருக்கின்றேன்.

சிவில் சமூகப்பிரதிநிதிகள் விடயத்திலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக தொடர்ந்து இயங்கி சேவையாற்றும் நிறுவனங்களுக்கே அழைப்புக்கள் மட்டுப்படுத்தப்படல் வேண்டும். பெயரளவு அமைப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

அத்துடன் முறைப்படி அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே சபா மண்டபத்தினுள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் போதிய ஒழுங்குக் கட்டுப்பாடு இல்லாமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் ஒழுங்கு நெறிமுறை ஓரளவு திருப்திகரமாக கடைப்பிடிக்கப்படுவதையும் குறிப்பிடல் வேண்டும்.

அடுத்த கூட்டம் கூட்டப்படுவதற்கு முன்பு இந்த அம்சங்கள் மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts