Ad Widget

ஒன்றரைக் கோடி மோசடி; பின்னணியில் பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் !

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நடைபெற்ற ஒரு கோடி 58 இலட்சம் ரூபா மோசடியின் பின்னணியில் பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் என்பவரே சூத்திர தாரியாக செயற்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பருத்தித்துறையைச் சேர்ந்த 14 குடும்பங்களிடம் ஒன்றரைக் கோடி ரூபாயினைப் பெற்று மோசடி செய்த சம்பவத்தில்  சரத்பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் என்பவரும் அவர்களுடன் பெண்கள் இருவரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள குறித்த நபர்களின் வீட்டுக்கு பாதிக்கப்பட்டவர்கள் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அது கைகலப்பு வரை சென்றது.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த வீட்டில் இருந்து இரண்டு பெண்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட சரத்பொன்சேகாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த சுரைஸ் என்பவரே வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஆசை காட்டினார்.

தாம் வெற்றிபெற்றால் அரசாங்கத்திற்கு தெரியாமல் எங்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகவும் எங்கள் வாக்குகளை தனக்கே வழங்குமாறும் கேட்டிருந்தார்.

அதனை நம்பிய  நாங்கள் சுரைசுக்கு வாக்களித்தோம். கடந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் சரத்பொன்சேகாவின் கட்சிக்கு பருத்தித்துறையில் கிடைக்கப்பெற்ற 3 வாக்குகளும் எங்கள் குடும்பத்தினருடையதுதான்.

தேர்தலுக்கு முன்னர் 4 தடவைகளுக்கு மேல் வீட்டுக்கு வந்த சுரைஸ்  வெளிநாட்டுக்கு எம்மை இவர்கள் தான் அழைத்துச் செல்லப் போகின்றார்கள் என்று சில வெள்ளைக்காரர்களை எமக்கு அறிமுகப்படுத்தினார்.
இதனால் அவரை நம்பி பணத்தை கட்டம் கட்டமாக கொடுக்கத் தொடங்கினோம். இந்தப் பணத்தை தற்போது கைது செய்யப்பட்ட பெண்களின் பெயர்களிலேயே வங்கியில் வைப்பு செய்து வந்தோம்.

இவ்வாறு பல குடும்பங்களிடம் பணத்தைப் பெற்ற இவர்கள் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக தொடர்ந்தும் ஏமாற்றி வந்தனர். ஆனால் எவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை.

ஒரு கட்டத்தில் இவர்கள் தங்களுடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டாம் என்றும் இறைவரி திணைக்களத்தினர் தம்மை சோதனையிடுவதாகவும் கூறி கடந்த ஒரு மாதகாலமாக எம்முடன் தொடர்பினை துண்டித்து விட்டனர்.

எனினும் இவர்களது மோசடி குறித்து பருத்தித்துறை , காங்கேசன்துறை , யாழ்ப்பாண பொலிஸ் நிலையங்களிலும்  மற்றும் மற்றும் புலனாய்வுப்பிரிவினரிடமும் முறையிட்டோம் ஆனால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

கடந்த 3ஆம் திகதி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் விசாரணை என இருவர் வீட்டுக்கு வந்து எனது அம்மாவை அழைத்துச் சென்றனர்.

எனினும் காங்கேசன்துறையில் இறங்கியதும் முச்சக்கர வண்டி ஒன்றில் எனது அம்மா கடத்திச் செல்லப்பட்டு 4 நாட்களின் பின்னர் கொடிகாமத்தில் உள்ள மயானம் ஒன்றில் போடப்பட்டிருந்தார்.

அதில் எனது அம்மா எடுத்துச் சென்ற பணம் அனுப்பியதற்கான வங்கிச் சிட்டைகள் , கடிதங்கள் என்பன பறிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்தும்  பொலிஸாருக்கு தெரியப்படுத்தி குறித்த நபர்கள் மீது சந்தேகம் எனவும் முறைப்பாடு செய்திருந்தோம் . எனினும் அப்போதும்  நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

மாறாக பொலிஸார் எங்களையே மிரட்டி அனுப்பினர். தற்போது இருக்க கூட எங்களுக்கு வீடு இல்லை அதனையும் ஈடு வைத்தே பணத்தை வழங்கினோம். தற்போது ஈடு வைத்தவர் பணத்தை திருப்பிச் செலுத்த தவறியமையால் வீட்டை விட்டு வெளியேறுமாறும்  கூறியுள்ளார்.

எனவே தற்போது நாம் வீதிக்கு வந்து விட்டோம். இனிமேல் சாவதைத் தவிர வேறு வழியில்லை- என்று கண்ணீர் மல்க கதறியழுதவண்ணம் ஊடகங்களிடம்  தெரிவித்தார்.

இதேவேளை , யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி குறித்த வங்கிக் கணக்கு தங்களுடையது இல்லை எனவும் தாம் பணம் எதுவும் பெறவில்லை என்றும் பொலிஸாரிடம் முதற்கட்ட விசாரணையில் சந்தேகநபர்கள்தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த கணக்கு சந்தேகநபர்களின் பெயரிலேயே   உள்ளமை  பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டது.
நீதிமன்ற அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னர் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.

Related Posts