Ad Widget

ஒத்துழைக்காவிட்டால் இலங்கைக்கு பெரும் பிரச்சினை, எச்சரிக்கிறது கூட்டமைப்பு

sumantheranஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் சர்வதேச விசாரணை குழுவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கப்படுமானால் இலங்கை பாரிய பிரச்சினையை எதிர்நோக்குவது உறுதி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த பிரச்சினையை நாட்டின் நலன் கருதி நோக்க வேண்டும். இல்லையேல் முழு நாடும் பாரிய பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை மனிதவுரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் கோரி ஆளும் கட்சியின் 9 உறுப்பினர்கள் சபையின் பொது செயலாளருக்கு மனுவொன்றை கையளித்துள்ளனர்.

இந்தநிலையில் நவநீதம் பிள்ளையின் குழு தொடர்பில் நாடாளுமன்றத்தின் நிலைப்பாட்டை கோருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு இல்லை என்று அந்த கட்சியின் அமைப்பாளர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் தமது கட்சியை பொறுத்தவரையில் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த விடயம் குறித்து கருத்துரைத்துள்ள ஜே.வி.பின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் அரசாங்கத்தின் தவறு காரணமாகவே இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை இந்த தருணத்தில் தெளிவு படுத்த வேண்டும். அதனைவிடுத்து இந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கே அதனை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளதாக விஜித்த ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts