Ad Widget

ஐ.நா பயங்கரவாத எதிர்ப்பு குழு யாழ்.விஜயம்

ஐக்கிய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் நிறைவேற்று குழுவுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்றது.

3

குழுவின் உதவி செயலாளர் நாயகம் ஜீன்-பால் லெபோரேட் தலைமையிலான குழுவே இந்த சந்திப்பை மேற்கொண்டது.

இந்த சந்திப்பு குறித்து யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

பயங்கரவாத நடவடிக்கைகள் நிலவிய காலங்களில் இருந்ததைவிட தற்போது எந்தளவான முன்னேற்றங்கள் அடையப்பெற்றுள்ளன என்பது தொடர்பில் அவர்கள் எங்களிடம் விளக்கம் கேட்டிருந்தனர்.

அத்துடன், மக்கள் தங்கள் உரிமைகளை எந்தளவுக்கு சுதந்திரமாக அனுவிக்கின்றனர் என்பது தொடர்பிலும் கேட்டிருந்தனர்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் எவ்விதமான இயல்பு நிலையில் மக்கள் வாழ்கின்றனர் என்றும் அந்த மக்களுக்காக வழங்கப்படும் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.

மேலும், சிவில் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும், குற்றங்கள் செய்தவர்கள் எவ்வாறு தண்டிக்கப்படுவதாகவும் கேட்டிருந்தனர்.

இவற்றுக்கு பதிலளித்த நாங்கள், ‘பொலிஸ் நிர்வாகம் நடைமுறையில் இருக்கின்றது. குற்றங்கள் செய்தவர்கள் நீதிமன்றத்தின் ஊடாக தண்டிக்கப்படுவதாக’ கூறினோம்.

மேலும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் திருப்தியான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினோம்.

மக்களுக்கிடையில் இருக்கின்ற ஒருங்கிணைப்பு தொடர்பில் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளோம் என சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் நா.வேதநாயகம் ஆகியோர் யாழ்.மாவட்ட செயலாளருடன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts