Ad Widget

ஐக்கிய இலங்கையையே இந்தியா வலியுறுத்துவதால் பிரிவினையை கோரமுடியாது – சம்பந்தன்

ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழவேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ளநிலையில் நாட்டைப் பிரித்துத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தாங்கள் கோரமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலத்தில் சமூக, பொருளாதார, கலை, கலாசார விழுமியங்களுடன் சுதந்திரமாக வாழவே விரும்புகின்றனர். எனவே, தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எப்போதும் இணைக்கப்பட்டே இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

sampanthan

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர் தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவினர் நேற்று சென்னையில் பாரதீய ஜனதாக் கட்சியின் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினர். இதன்பின்னர் பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பிரமுகர்கள் மற்றும் தமிழ்க் கூட்டமைப்பினர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அப்போதே இரா.சம்பந்தன் எம்.பி. மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு திருப்தியாக அமைந்தது என்று தெரிவித்த அவர், இலங்கையில் அதிகாரப் பரவலாக்கலுக்கு வழி செய்யும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சொன்னார்.

இலங்கை அரசுடன் இதுவரை நடத்திய பேச்சுக்களில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் நரேந்திர மோடி தங்களுக்கு உறுதியளித்துள்ளார் என்றும் சொன்னார்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அந்தச் செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

எமக்கு இலங்கை அரசுக்குமிடையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது நாம் வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் எமது நிலைப்பாட்டை அரசுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால் இலங்கை அரசாங்கத் தரப்பினர் தமது பக்கப் பதிலைத் தருவதற்கு அவகாசம் கேட்டார்கள். ஐந்து மாதங்கள் கடந்தன. ஏழு சுற்றுப் பேச்சுக்கள் முடிவுற்றன. எனினும் அவர்கள் பதில் தரவில்லை. 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற சந்திப்பில் நாம் அரசு தரப்புப் பதில் வரவில்லை என்பதை எடுத்துக் கூறினோம். பதில் தராவிட்டால் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை என்பதையும் அரசுக்குத் தெரியப்படுத்தினோம். அத்துடன் பதில் தரும் வரை அடுத்த கூட்டத்தை காலவரையன்றி ஒத்திவைப்பது என்றும் அறிவித்தோம்.

அரசு உலகத்தை ஏமாற்றுகிறது. எனவே, இந்தப் பேச்சுக்களில் நாம் கலந்துகொள்வதால் அரசு உலகை ஏமாற்றுவதற்கு துணையாக நாம் இருந்துவிடக்கூடாது என்று கருதி, அரசிடம் மீண்டும் முடிவைக் கோரினோம். பதில் தந்தால் அடுத்த கூட்டத்திற்கான திகதியை அறிவிப்போம் என்றும் தெரிவித்தோம். அவர்கள் பதில் தரவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ என்னை அழைத்துப் பேசினார். இதன்போது தமது தரப்பில் இருந்து பதில் தரமுடியாதுள்ளது என்றும் அதற்குப் பல காரணங்களையும் அவர் சொன்னார். நான் அதை எதிர்த்து பதில் தரவேண்டும் என்று கூறினேன். அதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை. இந்த நிலையில் அவருக்கும் எனக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று வந்தது.

13 ஆவது அரசியல் திருத்தம் குறித்துப் பேசும் போது முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, நீங்கள் ஜனாதிபதியாக உள்ள காலப்பகுதியில் இந்தத் திருத்தம் குறித்து பேசப்பட்ட எல்லா விடயங்களும் கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்று நான் கூறினேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு நாடாளுமன்ற தெரிவுக்குழு குறித்து என்னிடம் பேசினார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டாலும் இருதரப்புப் பேச்சு இடம்பெறவேண்டும் என்று நாம் ஜனாதிபதியிடம் 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வலியுறுத்தினோம். இதன்போது, இருதரப்புப் பேச்சு இடம்பெறும் என்றும் அதில் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்கள் நாடாளுமன்றத் தெரிவுக் குழு மூலம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அந்த அடிப்படையில் பேச்சு இட்ம்பெறும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அரச தரப்பில் 19 பேரும் எதிர்க்கட்சிகள் சார்பில் 12 பேரும் நியமிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி, எமது கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்திருக்கக்கூடும். எதிர்க்கட்சிகள் தெரிவுக்குழுவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இழுபறிகள் தொடர்ந்தன. மீண்டும் இருதரப்புப் பேச்சுகள் 2011 ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஆரம்பித்தன. அடுத்தடுத்து 3 கட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றன. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசு ஆக்கபூர்வமாக நடந்து கொள்ளவுமில்லை.

இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம், 18 ஆம், 19 ஆம் திகதிகளுக்குப் பேச்சு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அந்தத் திகதிகளில் அரசு பேச்சுக்கு வரவில்லை. இந்த நிலையில் நாம் எவ்வாறு தெரிவுக் குழுவுக்குப் போவது என்ற கேள்வி எழுந்தது.

இது ஒருபுறமிருக்க, ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, அரச அமைச்சர்கள், ஆளும் கட்சியிலுள்ள வேறு அங்கத்தவக் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் நீக்கப்படவேண்டும் என்றும் அதில் உள்ள அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் என்று பகிரங்கமாகப் பேச ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் நாம் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. அரசுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சு இடம்பெற்று நாம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினால் – அதனை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு உதவுமானால் – அந்தக் குழுவில் அங்கம் வகித்தத் தயாராக இருந்தோம். ஆனால் அடுத்த கட்டப் பேச்சுக்கு அரசு வராத நிலையில் எமது முயற்சி தோல்வியடைந்தது.

ஓர் உறுதியான நிலைப்பாடின்றி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குச் சென்று அவர்களால் ஏமாற்றப்படுவதை எங்களுடைய மக்களின் பெயரால் நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் எப்போதும் நாம் உறுதியாக இருக்கிறோம். இந்த விடயம் சம்பந்தமாக முன்னர் ஆட்சியிலிருந்து இந்திய மத்திய அரசுக்குப் பல தடவை நாம் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதேபோலவே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினோம். இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக அரசு தரப்பு உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. அது குறித்து நாம் கருத்துச் சொல்ல முடியாது. இரு தரப்பு மீனவர்களும் பாதிப்பு ஏற்படாத வகையில் புரிந்துணர்வு அடிப்படையில் தொழிலில் ஈடுபடவேண்டும் என்பதே எமது விருப்பம்.

தமிழகத் தலைவர்கள், பல்வேறு அமைப்புக்கள், தமிழ்மக்களுக்காக குரல் கொடுப்பதை நாம் வரவேற்கிறோம். ஆனாலும் எமது மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அந்தத் துன்பத்தைத் தொடர அனுமதிக்கமுடியாது. இலங்கை இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்படுவதையே நாம் விரும்புகின்றோம். அதற்காக அவர்கள் இணைந்து குரல் கொடுக்கவேண்டும். சர்வதேசம் இன்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றது. அதுபோலவே இந்தியாவும் குரல் கொடுக்கவேண்டும். எமது மக்கள் தமது பாரம்பரிய இடங்களில் நிரந்தர சமாதானத்துடன் நிரந்தரமான அமைதியைப் பெற்று போதிய அதிகாரத்துடன் வாழும் ஆட்சி முறை ஒன்றையையே விரும்புகின்றர்.

நாட்டை பிரித்து தீர்வு பெற்றுவிடமுடியாது. ஒருமித்த இலங்கைக்குள் நியாயமான, நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அதிகாரிகளைச் சந்திக்க அனுமதி வழங்கப்படாது என்ற போர்வையில் சுப்பிரமணிய சுவாமி கருத்துத் தெரிவித்திருந்தாரே? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் ஓர் இந்திய அரசியல்வாதி இப்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவில் முக்கிய பிரதிநிதியாக உள்ளார். அவரை நாம் விமர்சிக்க முடியாது. அதை நாம் விரும்பவும் இல்லை. – என்றும் தெரிவித்தார்.

Related Posts