Ad Widget

ஏழு செய்தியாளர்கள் ராணுவத்தால் தடுத்து வைப்பு

Sri_Lanka_Army_Logoயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு ஊடகப் பயிற்சியொன்றிற்காகப் புறப்பட்டுச் சென்ற 7 ஊடகவியலாளர்களை ஓமந்தையில் தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் அவர்களை ஒமந்தை காவல்துறையினரிடம் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனத்தில் பயணம் செய்த ஊடகவியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனத்தையும், சாரதியையும் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப் போவதாகக் கூறி காவல்துறையினர் வாகன சாரதியை விசாரணைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று ஓமந்தை காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

எனினும் விபரங்கள் எதனையும் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் ஊடகப் பயிற்சிக்காக அண்மையில் பொலன்னறுவை பகுதிக்குச் சென்றிருந்த போதும், அதேபோன்று மற்றுமொரு ஊடகப் பயிற்சிப்பட்டறைக்காக நீர்கொழும்புக்குச் சென்றிருந்த போதும், பொலிசார் அந்தப் பயிற்சிப்பட்டறைகளை, பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த முடியாது எனக் கூறி அவற்றில் கலந்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களைத் திருப்பி அனுப்பி வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், அரச சார்பற்ற நிறவனங்கள் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளையோ, கருத்தரங்குகளையோ நடத்தக் கூடாது. அது அவர்களுக்குக் குறித்தொதுக்கப்பட்ட செயற்பாடு அல்ல என்று பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts