Ad Widget

எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடு இறக்குமதிக்கு மிக விரைவில் தடை!

2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு எஸ்பெஸ்டஸ் (asbestos) கூரைத்தகடுகளை இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்துவதற்கு அமைச்சரவையுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டு மக்களின் சுகாதார ஆரோக்கிய நிலைமைகள் தொடர்பாகக் கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ‘ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை நோக்கி’ என்ற கருப்பொருளின் கீழ் நேற்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற மட்பாண்ட மற்றும் கண்ணாடி கைத்தொழிலாளர்களது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவுள்ள எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகளை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்குத் தாம் சுகாதார அமைச்சராக இருந்தபோது பல முன்மொழிவுகளை முன்வைத்த போதும் உயர்மட்டத்தில் அதற்கு ஆதரவு கிடைக்காமையினால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முடியாமல் போனது என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

எவ்வாறான போதும் எமது நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமானவற்றை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருபவர்களை மகிழ்விக்கும் வகையில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தெளிவான ஒரு தேசியக் கொள்கையின் அடிப்படையில் தேசிய கைத்தொழிலைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமாகவிருந்தும் அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை அதிகரித்து கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்து தேசிய உற்பத்தியாளர்களைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் சூழ்நிலையில், உயர் தரத்துடனான உற்பத்திகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுத்து தமது கடமையை நிறைவேற்ற வேண்டியது தேசிய உற்பத்தியாளர்களின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts