Ad Widget

எம்மை வெளியேற்றுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எந்த அருகதையும் கிடையாது – க.சிவநேசன்

தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற புளொட்டின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழுத்தத்தின் அடிப்படையிலேயே புளொட் அமைப்பு வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையில் ஈபிஆர்எல்எப் கட்சியை நீடிப்பதற்கு அனுமதியளிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளம் சட்டத்தரணிகள் பேரவையின் முக்கியஸ்தர்களுக்கு அறிவித்திருந்தனர். எனினும் புளொட்டை வெளியேற்றுவதில் அவர்கள் முனைப்பாக இருந்தனர் என்று அறியமுடிகின்றது.

நேற்றைய கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட புளொட் அமைப்பின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சருமான க.சிவநேசன் தெரிவித்ததாவது:

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளதால், அதில் எமது கட்சி சார்பில் என்னைக் கலந்துகொள்ளுமாறு தலைவர் சித்தார்த்தன் அழைப்புவிடுத்திருந்தார். அதனை ஏற்று நானும் புளொட்டின் செயலாளர் பவானந்தனும் கூட்டத்துக்கு வருகை தந்திருந்தோம்.

கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்பாகவே நாம் கூட்டத்தில் பங்கேற்றிருந்தோம். அப்போது பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மருத்துவ நிபுணர் பூ.லக்ஸ்மன் என்னை அழைத்தார். “நீங்கள் இந்தக் கூட்டதிலே பங்குபற்ற முடியாது” என்று அவர் என்னிடம் கூறினார். அதனால் நாம் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டோம்.
இந்தப் பேரவையினுடைய ஆரம்ப நிகழ்வு நடந்த போதும், தலைவரால் பங்குபற்ற முடியாது போனாது. அதன் பின்னர் புளொட் சார்பில் நான்தான் பங்குபற்றுவேன் என்று தலைவர் சித்தார்தனால் எனது பெயர் எழுத்துமூலமாக பேரவைக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதுமாத்திரமின்றி பேரவையால் நடத்தப்பட்ட பல கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்காக வெயில் எல்லாம் அலைந்து திரிந்து பேரவையின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த ஒரே ஒரு பிரதிநிதி நான்தான்.

எனவே நான் இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற முடியாது என்பது மாத்திரமின்றி புளொட்டின் முக்கிய பதவியை வகிக்கின்ற செயலாளரான பவானந்தனையும் கூட்டத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்கள்.

மக்கள் அமைப்பாக தமிழ் மக்கள் பேரவையை ஆரம்பித்த போது நாம் அதில் பங்கேற்றிருந்தோம். கட்சி பேதமின்றி பேரவையை முன்னெடுப்பதாகவே கூறப்பட்டிருந்தது. அந்த வகையில்தான் நாம் தொடர்ந்து பங்குபற்றியிருந்தோம். இன்று பேரவைக்குள் கட்சி ரீதியான ஆளுமை வந்ததனால்தான் என்னவோ தெரியாது நாம் வெளியேற்றப்பட்டுள்ளோம்.

இந்த விடயம் தொடர்பாக எங்களுடைய தலைமைக்கு அறிவித்துள்ளேன்.

எங்களை வெளியேறுமாறு பேரவையின் இணைத்தலைவர் மருத்துவ நிபுணர் பூ.லக்ஸ்மன்தான் இன்று தெரிவித்தார். எனினும் கஜேந்திரகுமார் எம்மை வெளியேறுமாறு தெரிவிக்க எந்த அருகதையுமற்றவர். அவரும் பேரவையில் ஒரு அங்கத்துவர்தான்.

நீண்டகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சிகளை வெளியேறு என்று தெரிவிப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எந்த அருகதையும் கிடையாது – என்றார்.

Related Posts