Ad Widget

எமது யதார்த்த அரசியலை சம்பந்தனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்: ஈ.பி.டி.பி

உணர்ச்சி பேச்சுக்களாலும் வெற்றுக் கோசங்களாலும் அரசியல் தீர்வை அடைய முடியாது என்றும், நடைமுறை யதார்த்த வழியிலேயே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் கூறியிருப்பதோடு கடந்த காலங்களில் அரசியல் உரிமைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கிடைத்திருந்த பல நல்ல வாய்ப்புக்களையும் இழந்திருக்கின்றோம் என்பதையும் எற்றுக் கொண்டிருக்கின்றார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

இது ஈ.பி.டி.பியினராகிய எமது நீண்டகால அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடேயாகும். ஆகவே நாம் அதனை வரவேற்கின்றோம் இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நேற்று (06) விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் யதார்த்தமான வழிமுறையையே வகுத்து செயலாற்றி வருகின்றோம்.
இந்த யதார்த்த வழிமுறை மூலமே நாம் அபிவிருத்தி முதற்கொண்டு மக்களின் வாழ்வாதார முயற்சிகளையும் திறம்பட செய்து வருகின்றோம்.
அது தவிர நாம் வகுத்துக் கொண்ட நடைமுறை யதார்த்த வழிமுறைதான் எமது மக்கள் இழந்து போன நிலங்களையும் படிப்படியாக மீட்டுத்தந்து கொண்டிருக்கிறது.

உணர்ச்சி பேச்சுக்களாலும், வெற்றுக் கோசங்களாலும் எமது உரிமைகளை நாம் பெற்றுவிட முடியாது. மாறாக யதார்த்த வழிமுறை மூலமே நாம் அரசியல் தீர்வு என்ற இலக்கை எட்டி விடமுடியும்.

இதுவரை கால வெறும் உணர்ச்சி பேச்சுக்களும் வெற்றுக் கோசங்களும் எமது மக்களுக்கு அழிவுகளையும், அவலங்களையும் பெற்றுத்தந்ததைவிட எதையும் தந்திருக்க வில்லை.

இதையே நாம் நீண்டகாலாக கூறியும் வலியுறுத்தியும் வந்திருக்கின்றோம். நாம் கூறி வந்த அதே கருத்துக்களை இன்று தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் காலம் கடந்தாவது கூற முற்பட்டதை நாம் வரவேற்கின்றோம்.

முன்னரே எமது யதார்த்த வழிமுறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்றுக் கொண்டிருந்தால் எமது மக்களுக்கு இத்தனை அழிவுகளும் அவலங்களும் நடந்திருக்காது.

முன்னரும் நடைமுறை யதார்த்த அரசியல் குறித்து சம்பந்தன் பல தடவைகள் கூறியிருக்கின்றார்.

ஆனாலும், அவையேதும் நடைமுறையில் சாத்தியப்படுத்தப்படவில்லை. ஆனால், வவுனியாவில் நடைபெற்ற மகாநாட்டில் கூறியிருக்கின்ற இவ்விடயங்களாவது அர்த்தமானதாகவும் ஆத்மார்த்தமாகவும் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு சம்பந்தன் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அதை ஈ.பி.டி.பி வரவேற்பதோடு தேவையான பங்களிப்புக்களை செய்யவும் தயாராகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Posts