Ad Widget

எதிர்ப்பு அரசியலால் சாதிக்க முடியாது; பாரதிராஜாவிடம் டக்ளஸ் விளக்கம்

எதிர்ப்பரசியலால் எதையும் செய்ய முடியாது. இணக்க அரசியலினூடாகவே எதையும் சாதிக்க முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிடம் சுட்டிக்காட்டினார்.

barathi2

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இயக்குநர் பாராதிராஜாவை, யாழ்ப்பாணம், டில்கோ விடுதியில் சந்தித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்ட விளக்களத்தை வழங்கினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், ‘1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால், அப்போதே நாம் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும். அத்துடன், அப்போது அதனை எதிர்த்தவர்கள் இப்போது மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொண்டதானது காலம் கடந்த ஞானமாகும்’ என்றார்.

‘அரசாங்கத்தில் அங்கம் வகித்திருப்பதன் காரணமாக நான் எதையும் நியாயப்படுத்தவில்லை. பிழைகள் இருப்பின் அதை தெரியப்படுத்துமிடத்து அதனை சரிசெய்யவும் நாம் தயாராக இருக்கின்றோம். கடந்த காலங்களில் எதிர்ப்பு அரசியலால் எமது மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

அந்த நிலையில் தான் நாம் இணக்க அரசியலை தெரிவு செய்து அரசுடனான நல்லுறவைப் பயன்படுத்தி மக்களுக்கானவற்றை பெற்றுக்கொடுத்து வருகின்றோம்.இணக்க அரசியல் மூலம் எதையும் செய்ய முடியுமென்பதை நாம் நம்புகின்றோம்’ என சுட்டிக்காட்டினார்.

‘ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியில் பேசிய ஒரேயொரு தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே எனவும் இயக்குநருக்கு சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனூடாக அவரது உணர்வு வெளிப்படுவதாக மேலும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த இயக்குநர் பாரதிராஜா, ‘யுத்தத்துக்குப் பின்னர் வடமாகாணம் கண்டுள்ள முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி குறித்து மகிழ்ச்சியடைவதாக’ தெரிவித்தார்.

இந்த சந்திப்பில், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts