Ad Widget

எதிர்க்கட்சித் தலைவர் தவராசா எதுவும் விளங்காததுபோல நடிக்கிறார் : ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தொடர்ந்தும் இந்த அவையில் ஒரே கேள்விகளையே முன்வைத்து வருகிறார். நாங்களும் விக்கிரமாதித்தன்போல திரும்பத் திரும்ப அதே பதிலையே சொல்லிக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவருக்கு இவை விளங்கவில்லையோ அல்லது விளங்காததுபோல நடிக்கிறாரோ தெரியவில்லை. ஊடகங்களில் தொடர்ந்தும் இந்தச் செய்திகள் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே அவர் மீண்டும் மீண்டும் அதே பிழையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் என்று முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் கடந்த மூன்றரை வருட காலச் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு அமர்வு விசேட அமர்வாக கடந்த வெள்ளிக்கிழமை (21.07.2017) கைதடியில் அமைந்துள்ள பேரவையில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பதிலளிக்கும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பதிலளிக்கையில்..

பளையில் அமைந்துள்ள காற்று மின்னாலையை கேள்வி கோரல் முறையில் நாங்கள் வழங்கி இருந்தால் மின் ஆலை நிறுவனங்களிடம் மாகாணசபை கூடுதலான நிதியைப் பெற்றிருக்கலாம் என்று கூறுகிறார். இவரது இந்தக் கேள்விக்குப் பல தடவை பதில் சொல்லிவிட்டோம். மின் உற்பத்தி நிலையங்களுக்கு மத்திய அரசே அனுமதி வழங்குகிறது. கேள்வி கோரலையும் அவர்களே செய்கிறார்கள். மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்ட அந்த மின் நிலையத்துக்கு மாகாணசபை எவ்வாறு கேள்வி கோரலைச் செய்ய முடியும்.

பளையில் இயங்கும் காற்று மின் ஆலை நிறுவனங்கள் மாகாணசபைக்கு நன்கொடையாகவே பணம் தருகிறார்கள். இந்தப் பணமும் விவசாய அமைச்சரின் வங்கிக் கணக்கிலோ விவசாய அமைச்சின் வங்கிக் கணக்கிலோ வைப்பில் இடப்படுவதில்லை. பிரதம செயலாளரின் கணக்கிலேயே வைப்பில் இடப்படுகிறது. வருடாந்த பாதீட்டில் உள்ளடக்கப்பட்டு கணக்காய்வுகளுக்கும் உட்படுத்தப்படுகிறது. இதில் எதுவும் சந்தேகம் இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் பிரதம செயலாளரிடம் அல்லது நிதியைக் கையாளும் பிரதிப் பிரதம செயலாளரிடமே கேட்க வேண்டும். ஏன் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

மாங்குளத்தில் கரும்புச் செய்கையில் முதலீடு செய்வதற்கு ஒரு நிறுவனம் வந்தபோது விவசாய அமைச்சர் மறுத்ததாகவும் அமைச்சர் ஏதோ 25 வரை கேட்டதாகவும் அவர்கள் 15 வரை தருவதாகவும் கூறியிருப்பதாகவும் யாரோ தனக்குச் சொன்னதாகவும் இது என்னவென்று தனக்கு விளங்கவில்லை என்றும் இப்போது புதிதாக எதிர்க்கட்சித் தலைவர் ஏதோ கூறுகின்றார். மாங்குளத்தில் கரும்புச் செய்கைக்கு மட்டுமல்ல மாதுளங்கன்று நடுவதற்குக்கூட எங்களிடம் கேட்டு இதுவரையில் எவரும் வரவில்லை. உங்களிடம் யாராவது அவ்வாறு சொல்லியிருந்தால் அவர்களை இந்த அவைக்கு முன்னால் அழைத்து வந்து சொல்லச் சொல்லுங்கள். எதிர்க்கட்சித் தலைவர்பற்றியும் எதேதோ எல்லாம் எங்களிடம் வந்து கூறுகிறார்கள். உறுதிப்படுத்தப்படாத எதையும் நாகரிகம் கருதி சபையில் நாங்கள் கேட்பதற்கு விரும்பவில்லை.

கணக்குக்கு வராத கணக்குப்பற்றியும் எதிர்க்கட்சித் தலைவர் ஏதோ கூறுகிறார். தன்னைப்போல பிறரையும் நேசி என்றுதான் கூறுவார்கள். சிலர் தம்மைப்போல பிறரையும் யோசிக்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் கோவில்களுக்கு காசோலையாக நன்கொடைகளை வழங்கிவிட்டு அந்தக் காசோலையை மாற்றி அதில் இருந்து ஒரு தொகையை பெறுவதற்காகவே கூடவே ஒரு அதிகாரியும் அனுப்புவார். அதேமாதிரி நாங்களும் இருப்போம் என்று யோசிக்கிறார்கள்போலும். நான் மட்டுமல்ல மாகாணசபையின் எந்த ஒரு அமைச்சரும் இவ்வாறான ஊழல்ரூபவ் மோசடிகளில் ஈடுபட்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

http://www.e-jaffna.com/archives/84592

Related Posts