Ad Widget

எண்மர் படுகொலையாளியை பொதுமன்னிப்பில் விடுவித்தமைக்கு யாழ்.பல்கலை. மாணவர் ஒன்றியம் கண்டனம்

மிருசுவிலில் பாலகன் உள்பட 8 தமிழர்களைப் படுகொலை செய்த குற்றவாளியான இராணுவச் சிப்பாயை அவரது தூக்குத் தண்டனையை இரத்துச் செய்து பொது மன்னிப்பில் விடுதலை செய்த ஜனாதிபதியின் செயலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி அன்று மூன்று சிறுவர்கள் உள்பட எட்டுப்பேரை வெட்டியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் படுகொலை செய்த கஜபா அணியைச் சேர்ந்த சுனில் ரத்னநாயக்க என்னும் இராணுவச் சிப்பாய் அண்மையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்டார்.

இவர் இந்த குற்றத்துக்காக 2015ஆம் ஆண்டு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட நீதிமன்ற அமையத்தினால் குற்றவாளியாக காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர். மேலும் மேன்முறையீட்டின்போது ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வினால் குற்றவாளியாக காணப்பட்டு தூக்குத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டவர்.

இவருக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை இலங்கை நீதித்துறையை பொறுத்தமட்டில் புறநடையான ஒன்றாகும். ஏனெனில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் இலங்கையில் சாதாரணமாக தண்டனை பெறாத குற்றங்களாகவே காணப்படுகின்றன.

ஆகவே புறநடையாக வழங்கப்பட்ட இத்தீர்ப்பும் ஜனாதிபதியினால் இல்லாமல் ஆக்கப்பட்டு இருப்பது இலங்கையில் தமிழருக்கு எதிரான குற்றங்களுக்கு ஒரு போதும் நீதி வழங்கப்படமாட்டாது என்பதை மீளவும் உறுதிப்படுத்துகிறது.

அனைத்துலகும் கோரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சத்தில் உறைந்திருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி சத்தமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த விடுதலை நடவடிக்கையானது எத்தகைய ஒரு அவலமான சூழ்நிலையிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிரான தனது கருத்து நிலையிலிருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை என்பதை மிகத்தெளிவாக உணர்த்துகிறது.

மக்களின் பாதுகாப்பற்ற அவலமான துன்பமான ஒரு சூழ்நிலையை தனது அரசியல் லாபத்துக்காகவும் சிங்கள பௌத்த மேலாண்மையை இந்நாட்டில் நிலை நிறுத்துவதற்காகவும் பயன்படுத்திய இந்த இழிசெயல் தமிழ் மக்களாகிய எங்களை மிகுந்த விசனத்துக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.

இந்த அரசு தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை என்பதை இந்நிகழ்வு துல்லியமாக வெளிப்படுத்துகிறது.

மேலும் இந்த நடவடிக்கை தமிழ் மக்களுக்கான நீதியை ஒரு போதும் உள்நாட்டில் கிட்டாது என்கின்ற எமது நிலைப்பாட்டையும் மீள உறுதி செய்கிறது.

ஆகவே இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி சர்வதேசத்தின் கரங்களிலேயே இருக்கிறது என்பதை நாங்கள் மீளவும் வலியுறுத்த விரும்புகிறோம்.

தமிழ் மக்கள் நீதி பெறுவதற்கான ஒரே வழி சர்வதேச குற்றவியல் பொறிமுறைகளே என்பதை நாங்கள் உறுதியோடு வலியுறுத்துகின்றோம் – என்றுள்ளது.

Related Posts