Ad Widget

எங்கே எங்கள் உறவுகள்? உடன் மீட்டுத் தாருங்கள்! – மன்னாரில் ஆணைக்குழு முன் கதறல்

“இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் – இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் – வெள்ளை வான்களில் கடத்தப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே? அவர்களை உடன் மீட்டுத்தாருங்கள்.” இவ்வாறு மன்னாரில் காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் கதறி அழுதனர் காணாமல்போனோரின் உறவுகள்.

mannar-missing

காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது

மன்னார் மேலதிக அரச அதிபர் திருமதி. நந்தினி ஸ்டான்லி டி மெலின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் டபிள்யு.ஏ.ரி.ரெட்ணாயக, சுரஞ்சனா வித்யாரெட்ண, எச்.சுமணபால ஆகிய மூன்று ஆணையாளர்கள் உள்ளடங்களாக குறித்த அமர்வு இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 257 பேருக்கு ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி முறைப்பாடுகளை பதிவு செய்ய பிற்பகல் 2 மணிவரையில் 112 பேர் பதிவுகளை மேற்கொண்டிருந்ததுடன் மேலதிகமாக 36 பேர் புதிதாக பதிவுகளைச் செய்திருந்தனர். மாலை 5 மணிவரை அமர்வு நடைபெற்றது.

குறித்த அமர்வின்போது கடந்த காலங்களில் மன்னார் மாவட்டத்தில் காணாமல்போன, கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனோர், இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமல்போனோர், இறுதிப் போரில் காணாமல்போனோர், வெள்ளை வான்களில் கடத்தப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

கணவனைப் பறிகொடுத்த மனைவியர், பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர், சகோதரர்களைத் தொலைத்த உடன் பிறப்புக்கள், உறவுகளை இழந்து தவிக்கும் உறவினர்கள் என பல்வேறுபட்ட தரப்பினர் இந்த அமர்வில் கண்ணீர்மல்க சாட்சியமளித்தனர்.

காணமல்போன – காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளை உடன் மீட்டுத் தருமாறு அவர்கள் கதறி அழுதனர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை மற்றும் சுவிஸ் தூதரகத்தின் அதிகாரியான டாவிட் ஆகியோர் நேற்று இந்த அமர்வை நேரில் பார்வையிட்டு கண்கலங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts