Ad Widget

‘எங்களிடம் துப்பாக்கி இருந்தும் அதனை நாம் பாவிக்கவில்லை’

“ஊர்காவற்றுறையில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியபோது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மெய்ப் பாதுகாவலர்களாக இருந்த எம்மிடமும் துப்பாக்கிகள் இருந்தன. அதனை நாம் பயன்படுத்தியிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும். ஆனால், அதனை பாவிக்க வேண்டாம் என மாவை சேனாதிராஜா எம்மைத் தடுத்துவிட்டார்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்றுறையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15ஆவது சாட்சியான மாவை சேனாதிராஜாவின் அப்போதைய மெய்ப் பாதுகாவலராக இருந்த தர்மரட்ணம் தமிழ்வேந்தன், நேற்று வெள்ளிக்கிழமை (25) யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

2001ஆம் ஆண்டு ஊர்காவற்றுறைக்குத் தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்ற தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி இருவரைப் படுகொலை செய்த வழக்கு விசாரணை, 14 வருடங்களின் பின்னர் யாழ்.மேல் நீதிமன்றில் தொடர் வழக்கு விசாரணைக்காக, ஐந்தாவது நாளாகவும் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றுவரும் விசாரணையில் தமிழ்வேந்தன் என்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சியமளித்தார்.

“பொலிஸ் திணைக்களத்தில் உப பொலிஸ் பரிசோதகராக இணைந்த நான் பின்னர் மாவை சோனாதிராஜாவின் மெய்பாதுகாவலராக இருந்தேன். சம்பவம் இடம்பெற்ற தினமான 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்துக்காக நாங்கள் வாகனத்தில் ஊர்காவற்துறை சென்றுகொண்டிருந்தோம்.

“அப்போது நாரந்தணை சந்தியில் எங்கள் முன்னாள் சென்ற வாகனத்தின் வெள்ளை நிற கப் வண்டியயொன்று வீதியினை மறித்து நின்றிருந்தது. அப்போது எங்களுக்கு முன்னால் வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன. நாங்கள் எங்களுடைய கார் கண்ணாடியினைத் திறந்து வெளியே பார்த்தோம். அங்கிருந்து 60 தொடக்கம் 80 பேர் வரையில் கையில் வாள், இரும்புகம்பி, செயின் துப்பாக்கி என்பவற்றுடன் எங்களை நோக்கி ஓடி வந்தனர்.

“முதலாவதாக எம்.கே.சிவாஜிலிங்கத்தினுடைய வாகனம் நின்றது. எங்களுடைய வாகனம் அதில் இருந்து நான்காவதாக நின்றது. முதலாவது வாகனம் தாக்கப்பட்டு துப்பாக்கிச் சத்தமும் கேட்டது. அப்போது எங்கள் காரினைத் திருப்ப முடியாமல் போனது. வாகனத்தினை ஓரமாக நிறுத்திவிட்டு வெளியில் இறங்கினோம்.

“எங்களை நோக்கி அந்தக் கூட்டம் தாக்க வந்தது. அப்போது மாவை சேனாதிராஜா மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர். நான் மெய்பாதுகாவலர் என்ற ரீதியில் அவரை பாதுகாக்கும் நோக்குடன் தாக்க வந்தவர்களைத் தட்டி விட்டேன்.

“சேனாதிராஜா ஜயாவுக்கு விழவிருந்த இரும்பு அடி என் மீது பட்டது. இப்போதும் அதன் உள்காயம் உள்ளது. நிறையப்பேர் என்னைப் பிடித்து கீழே போட்டார்கள். அதன்போது ‘இவன் தமிழ் பொலிஸ். விடுங்கோ’ என சொன்னார்கள்.

“நான் கூட்டத்தில் இருந்து வெளியில் வந்து பார்த்தபோது, மாவை சேனாதிராஜா தலையிலும் கையிலும் இரத்தக் காயத்துடன் நின்றிருந்தார். அப்போது என்னிடம் துப்பாக்கி இருந்தது. இருந்தும் நான் அதனைப் பாவிக்கவில்லை. பிரச்சினையை சமயோசிதமாக முடிக்க நினைத்தோம். பின்னர் மாவை சேனாதிராஜாவை கூட்டிக்கொண்டு வைத்தியசாலைக்கு வந்தோம்’

“வெள்ளைக்காட்சட்டை அணிந்து இருந்து நபர் தான் எங்களைத் தாக்கினார் என நான் வைத்தியசாலையில் கூறினேன். அப்போது நெப்போலியன் (செபஸ்ரியான் ரமேஸ்) அவன் தான் என வைத்தியசாலையில் நின்ற கூட்டமைப்பு ஆதரவாளர்கள் என்னிடம் கூறினார்கள்” என தனது சாட்சியினை மேல் நீதிமன்ற நீதிபதி மா இளஞ்செழியன் முன் வழங்கினார்.

அத்துடன், சம்பவம் இடம்பெற்ற தினம் தாக்கிய எதிரிகளினால் பயன்படுத்தப்பட்ட சான்றுப்பொருள் ஒன்றினையும் அவர் அடையாளம் காட்டினார்.

Related Posts