Ad Widget

ஊடகங்களை அடக்கி ஒடுக்க சதி – விஐயகாந்

sunthrsing-vijayakanthஜனநாயகத்தின் மூன்றாவது மாபெரும் தூணாக விளங்குவது ஊடகங்களே. இந்த மாபெரும் ஜனநாயத் தூணை அடக்கி ஒடுக்க பல தீய சக்திகள் கடந்த காலங்களிலும் நிகழ்காலங்களிலும் செயற்பட்டு வந்தன, செயற்பட்டு வருகின்றன என முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். விஐயகாந் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பத்திரிக்கை நிருபர்கள் பயிற்சி பட்டறையொன்றிக்காக கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது, ஓமந்தை பொலிஸாரினால் வெள்ளிக்கிழமை (25) தடுத்து வைக்கப்பட்டது தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பல இக்கட்டான சூழ்நிலையிலும் கூட வடமாகாண பத்திரிகையாளர்கள் குறிப்பாக யாழ்ப்பாண பத்திரிகை நிருபர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் தங்களுடைய உயிரை துச்சமாக மதித்து ஜனநாயகத்தின் படி மக்களுக்கு உண்மைகளை எடுத்துச் கூறி வந்தார்கள்.

அந்த வகையில் பல ஊடக ஆசிரியர்கள், ஊடக நிருபர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மீறி தாங்கள் எடுத்த கடமைக்கும், உண்மைக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து மக்களுக்கு உரிய காலத்தில் உரிய செய்திகளை சென்றடைய பத்திரிகையாளர் தங்களுடைய செயற்பாடுகளை செய்து வருகிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மையே.

அந்த வகையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தமிழ் பேசும் பத்திரிகையாளர்களுக்கு விசேட பயிற்சிப் பட்டறை நடாத்துவதற்கு அரசசார்பற்ற தன்னார்வ நிறுவனம் ஒன்று ஏற்பாடுகளை செய்து வந்திருந்தது.

இந்த 3 மாதங்களில் பல தடவைகள் இந்த பயிற்சிப் பட்டறையை நிகழ்த்த முயன்றபோது பாதுகாப்பு அமைச்சர்களும் ஏனைய தீய சக்திகளும் இதனை தடுத்து நிறுத்தினார்கள்.

இருந்தபோதும் இன்று சனிக்கிழமை (26) காலை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 2 நாள் பயிற்சிப் பட்டறைக்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்திரிகை நிருபர்கள் வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது ஓமந்தைச் சோதனைச் சாவடியில் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

வழமைக்கு மாறாக அவர்கள் சென்ற வாகனத்தை பரிசோதித்து கஞ்சா இருப்பதாக தெரிவித்து அவர்களை ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது பத்திரிகையாளர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தையடுத்து விடுதலை செய்யப்பட்டார்கள் என்பது மிகவும் வேதனைக்கும் கண்டிக்கத்தக்கதுமான ஓர் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.

உண்மையிலேயே யாழ்ப்பாண பத்திரிகையாளர்கள் இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு செல்லவிடாது தடுப்பதே காவல்துறையினதும் ஏனைய பாதுகாப்பு தரப்பினதும் நோக்கமாகும்.

இருந்தபோதும் இவற்றையெல்லாம் துணிச்சலுடன் எதிர்கொண்டு இன்றைய பயிற்சிப்பட்டறைக்கு சென்றிருக்கும் நிருபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எமது கட்சியின் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எனவே பத்திரிகை ஜனநாயகத்தை யார் கரம் கொண்டு அடக்கியாள நினைக்கிறார்களோ அவர்களுக்கு எதிராகவும் நாம் செயற்பட தயாராகவே இருக்கின்றோம் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்டுவதோடு தற்போது நடைபெற்ற சம்பவத்துக்கு எமது கடுமையான விசனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts