யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, வடக்கு உறுப்பு மாற்றுச் சிகிச்சை சங்கம் மற்றும் யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்றுச் சிகிச்சையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பேரணி நேற்றையதினம் நடைபெற்றது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஆரம்பமான பேரணி, பலாலி வீதி, நாவலர் வீதி, கே.கே.எஸ். வீதி மற்றும் வைத்தியசாலை வீதி வழியாகச் சென்று மீண்டும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையை வந்தடைந்தது.
இப்பேரணியில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், மருத்துவர்கள், மருத்துவபீட மாணவர்கள், தாதிய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர்.
நிகழ்வின் நிறைவாக, இதுவரை மூளைச்சாவடைந்த நிலையில் தமது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கி, பிறருக்கு மறுவாழ்வு அளித்த கொடையாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட விசேட நினைவுப் பகுதி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நினைவுப் பகுதி, உயிரிழந்த பின்னரும் தமது உறுப்புகளின் மூலம் பிறருக்கு வாழ்வளித்த கொடையாளர்களின் உன்னதமான மனிதநேயத்தையும் தியாகத்தையும் என்றும் நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது.



