Ad Widget

உறுதிகள் பெயர் மாற்றாமையால் வழக்குகள் தொடுப்பதில் சிக்கல்; வலி.வடக்கு மக்கள் சிலர் சிரமத்தில்

tellepplai_bundவலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு மக்கள் தயாராக உள்ள போதும், அவர்களின் உறுதிகள், ஆவணங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாமையினால் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வலி.வடக்கில் இராணுவத் தலைமையகம் அமைப்பதற்காக 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படுவதற்கான அறிவித்தல்கள் கடந்த 22 ஆம் திகதி ஒட்டப்பட்டுள்ளன.

இதனை எதிர்த்து வலி. வடக்கு மக்களினால் வழக்குத் தாக்கல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளது.

இதற்காக வலி.வடக்கு மக்களின் காணி உறுதிகள், தேசிய அடையாள அட்டைகள் என்பவற்றைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன.

இதுவரை ஆயிரம் பேர் வரையில் தமது ஆவணங்களைப் பதிவு செய்துள்ளனர். பெருமளவான வலி.வடக்கு மக்கள் ஆவணங்களை வைத்திருக்கின்ற போதிலும் அவர்கள் அவற்றைப் பெயர்மாற்றம் செய்யாமல் வைத்துள்ளதால் வழக்குத் தாக்கலுக்கான பதிவுகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

சிலர் தமது தந்தை, தாயின் பெயரில் உறுதிகளை வைத்துள்ளனர். அவை பெயர் மாற்றம் செய்யப்பட்டாலே வழக்குத் தாக்கல் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப் படுகின்றது. வழக்குத் தாக்கல் செய்வதற்கு மக்கள் ஆயிரக்கணக்கில் தயாராக இருக்கின்றபோதும், பெயர் மாற்றம் செய்யப்படாமையினால் சிக்கல்களை எதிர் கொள்கின்றனர்.

Related Posts