Ad Widget

உரிமை கொண்டாடிய வழக்கு : தனுஷ்க்கு சாதகமாக தீர்ப்பு

நடிகர் தனுஷை உரிமை கொண்டாடிய வழக்கில் மேலூர் தம்பதியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரை, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியரின் மகனான இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, இப்போது தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார்.

தனுஷ் தங்களுடைய மகன் என்று கூறி மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் தங்களுக்கு பராமரிப்பு செலவிற்காக மாதம் ரூ.65 ஆயிரம் பணம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். இதை எதிர்த்து நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக தனுஷ் நேரில் ஆஜராகும்படி கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து தனுஷூக்கு அங்க அடையாளங்கள் உள்ளிட்டவைகள் மருத்துவரின் உதவியோடு சரிபார்க்கப்பட்டன. அதேப்போன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் நடந்தன. தொடர்ந்து இரு தரப்பு வாதங்களும் கோர்ட்டில் நடைபெற்றன. இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வெளியானது. அதன்படி அனைத்து அம்சங்களும் தனுஷ்க்கு சாதகமாக இருப்பதால் மேலூர் கோர்ட்டில் கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் இந்த வழக்கில் தனுஷ்க்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது தனுஷை நிம்மதி அடைய செய்திருக்கிறது.

Related Posts