Ad Widget

உயிர் பலியிடுதலே மீள்குடியேற்றத்தை தடுக்கின்றது – யோகேஸ்வரன் எம்.பி

யாழ்ப்பாணம், வலி.வடக்கு மக்கள் இன்னமும் மீள்குடியேறாமல் இருப்பதற்கு காரணம், கடந்த காலங்களில் உயிர்கள் போட்ட சாபம் தான் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் மதவிவகார செயலாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் புதன்கிழமை (29) தெரிவித்தார்.

sineeeththambi-yokeswaran

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

பலிகள் மூலம் உயிர்களை கொன்ற பாவம் தான், இன்று வரை எங்களை துன்பமாக தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. உயிர்பலியை எதிர்க்கும் விசேட சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லவிருக்கின்றேன்.

இன்று புதன்கிழமை நரியிட்டான் வைரவர் ஆலயத்தில் இடம்பெறவிருந்த மிருக வேள்வியை தடுத்து நிறுத்தும்படி, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டிருந்தேன்.

இந்த வேள்வி நடக்கவிருந்த கோவில் பதிவு செய்யப்படாது தனியாருக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ளது. வேள்வி நடத்துவதற்கு அப்பகுதியிலுள்ள சனசமூக நிலையத்தினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மேலும், மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை, கிழக்கு இந்து ஒன்றியம், இந்து மாமன்றம், சைவ மகா சபை, கொழும்பு சனாதன தர்ம விழிப்புணர்வு கழகம் ஆகியனவும் இதற்கு தீவிர எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

உயிர்க்கொலை இனி நடப்பதற்கு இடமளிக்க முடியாது. இதை முற்றுமுழுதாக தடுப்பதற்கு முழுமுயற்சி எடுப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts