Ad Widget

உடுவில் மகளிர் கல்லூரி மாணவியைத் தாக்கிய ஆசிரியை கைது!

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தமது அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்க வலியுறுத்தித் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த போராட்டம் கடந்த-07 ஆம் திகதி திட்டமிட்டுக் குழப்பப்பட்டதுடன், இதன் போது மாணவிகள் மீது கல்லூரியை முகாமைத்துவம் செய்துவரும் தென்னிந்தியத் திருச்சபையின் தலைவர் டீ. எஸ். தியாகராஜாவிற்கு நெருக்கமானவர்கள் மற்றும் சில ஆசிரியர்கள் தாக்குதல்களையும், தவறான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டனர்.

இதன் போது மாணவிகள் மீதான தாக்குதல் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யச் செல்லச் சென்ற போது பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுத்து விட்டனர். பின்னர் கல்லூரியின் பழைய மாணவி, தாக்குதலுக்கிலக்கான மாணவியொருவரின் பெற்றோருடன் சென்று மாணவிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தார். எனினும், பின்னர் குறித்த முறைப்பாட்டை மீளப் பெறுமாறு சுன்னாகம் பொலிஸார் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்த போதும் பழைய மாணவி அதற்குச் சம்மதிக்கவில்லை.

மாணவிகள் மீதான தாக்குதல் தொடர்பில் காணொளி ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்திலோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை ஆதாரபூர்வமாக அடையாளம் காட்டும் பட்சத்திலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகவிருப்பதாகச் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்ததற்கமைய கல்லூரியில் க.பொ. த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(19) ஆசிரியையொருவர் தன்னைத் தாக்குவது தொடர்பான காணொளி ஆதாரங்களுடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்தார்.

இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் சம்பந்தப்பட்ட ஆசிரியை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுச் சுமார் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இதன் போது ஆசிரியை குறிப்பிட்ட மாணவியைத் தாக்கியதை ஏற்றுக் கொண்டதுடன், கண்ணீர் விட்டு அழுது தாக்கப்பட்ட மாணவியிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். அத்துடன் கல்லூரியின் தற்போதைய உப அதிபரும் பொலிஸ் நிலையம் வருகை தந்து ‘எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது’ என உறுதியளித்தார்.

மேலும் மாணவிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் பகிரங்க மன்னிப்புக் கேட்டதுடன் குறிக்கப்பட்ட ஆசிரியையை விடுவிக்குமாறும் மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாதிக்கப்பட்ட மாணவி தன் மீது தாக்குதல் இடம்பெற்றமை தொடர்பில் உறுதிப்படுத்தும் வகையிலும், எதிர்வரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் சம்பந்தப்பட்ட ஆசிரியையிடமிருந்து அவரது கையெழுத்துடனான கடிதமொன்றைப் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியை மீது கொண்ட இரக்கத்தினால் தாக்கப்பட்ட மாணவி குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியையுடன் சமரசம் செய்து கொள்வதற்கு இணங்கியுள்ளார்.

இதேவேளை, மேற்படி ஆசிரியை கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதை அறிந்த வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் உள்ளிட்டோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற போது அங்கு சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்துப் பொலிஸார் விசாரணை செய்யுமிடத்திலிருந்து வடமாகாண சபை உறுப்பினர் உள்ளிட்டோரை வெளியேற்றியதைத் தொடர்ந்து விசாரணைகள் சுமூகமாக நிறைவுக்கு வந்தது.

Related Posts