Ad Widget

உங்கள் பிள்ளைகளை எங்கள் பிள்ளைகள் போல நாங்கள் பாதுகாப்போம் – உதய பெரேரா

udaya pereraசிவில் பாதுகாப்பு குழுவில் இணைத்துக்கொண்டவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுப்போம் என யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.

சிவில் பாதுகாப்பு குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் பலாலி இராணுவ படைத் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை (05) மதியம் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சிவில் பாதுகாப்பு குழுவில் யாழ். மாவட்ட இளைஞர் யுவதிகளையும் இணைத்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அவர்கள் சிவில் பாதுகாப்பு குழுவுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல இளைஞர், யுவதிகள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளையும் சேர்த்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொண்டேன். அதை ஏற்றுக்கொண்ட சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அத்தியட்சகர் யாழ். மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் சிவில் பாதுகாப்புக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.

இதில் சில குறைபாடுகள் காணப்பட்டன. அவற்றை நீக்குவதற்கு அடுத்த கட்டமாக கூடிய தகைமை கொண்டவர்களை இத்திணைக்களத்தில் சேர்த்துக்கொள்ளவுள்ளோம். வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ளவர்களுக்கு சம்பள உயர்வையும் வழங்கி அவர்களையும் நல்ல எதிர்காலத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்.

சிவில் பாதுகாப்பு குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களின் திறமைகளின் அடிப்படையில் அவர்கள் ஒவ்வொரு துறையிலும் இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.

உங்கள் பிள்ளைகளை எங்கள் பிள்ளைகள் போல நாங்கள் பாதுகாப்போம் இப்பிள்ளைகளுக்கு சம்பள ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து தருவோம். உங்கள் பிள்ளைகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தையும் அமைத்துக் கொடுப்போம் என இந்நேரத்தில் பெற்றோர்களுக்கும் நாங்கள் வாக்குறுதி தருகின்றோம் என மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அத்தியட்சகர் அட்மிரல் அனந்த பீரிஸ் உரையாற்றுகையில் ..

சிவில் பாதுகாப்பு குழுவில் இணைத்து கொள்ளப்பட்டவர்களில் யாரும் நாங்கள் இராணுவத்தினரால் அடிமைப்படுத்தப்படுவோம் என ஒரு போதும் நினைக்க வேண்டாம். சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்பது அரச திணைக்களம். தற்போது நாங்கள் எமது திணைக்களத்தின் ஊடாக பல்வேறுபட்ட அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்த திணைக்களத்தின் ஊடாக கல்வி, கலாச்சாரம், விவசாயம் என பல்வேறுபட்ட அபிவிருத்திகளை அரசாங்கத்துடன் சேர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களம் இல்லாதமையால் இராணுவத்தின் ஒத்துழைப்பு எமக்கு தேவைப்படுகின்றது. இதேபோல தான் கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு குழு ஆரம்பித்த போதும் எமக்கு இராணுவ ஒத்துழைப்பு தேவைப்பட்டது.

அப்போது அங்கு இராணுவ கட்டளைத்தளபதியாக மேஜர் ஜெனரல் உதயபெரேராவே கடமையாற்றினார். அவர் பல்வேறு உதவிகளை எமக்கு செய்திருந்தார். அதேபோல இங்கு (யாழ்ப்பாணத்தில்) தற்போது ஆரம்பிக்கும் போதும் அவர் எமக்கான உதவிகளை செய்வார்.

சிவில் பாதுகாப்பு குழுவில் முதற் தடவையாக இணைத்துக் கொள்ளப்படவர்களுக்கு மாதாந்த சம்பளமாக 18 ஆயிரம் வழங்கப்படும். அதேவேளை அவர்களின் கல்வி நடவடிக்கையை முன்னேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிவில் பாதுகாப்பு குழுவில் கடமையாற்றும் ஒருவர் இறந்து போனால் அவரின் பிள்ளைகளுக்கு ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். அதன் ஊடகாக கிடைக்கும் பணத்தின் வட்டி மூலம் அவரது பிள்ளைகள் வாழ்க்கையினைக் கொண்டு நடத்தலாம்.

இறப்பு நடந்தால் இறப்பு தொகையாக 3 இலட்சம் வழங்கப்படும். அதேபோல விண்ஷட நிகழ்வுகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படும். சிவில் பாதுகாப்பு குழுவில் ஆறுமாதங்கள் தொடர்ச்சியாக திறமையாக வேலை செய்பவர்களுக்கு மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகள் என்பனவும் வழங்கப்படும்

இத்திணைக்களத்தில் திறமையாக வேலை செய்பவர்களில் 20 பேர் தெரிவு செய்து இந்தியாவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

இன்றைய தினம் நியமன கடிதம் வழங்கப்படவர்களுக்கான சீருடைகளும் அவரவர் கல்வித்தகைமை மற்றும் திறமைக்கான வேலைகளும் விரைவில் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts