Ad Widget

ஈ.பி.டி.பியிலிருந்து விலகி, புதிய செயற்பாட்டைத் தொடரவுள்ளேன்

‘தமிழ் மக்களுக்குரிய நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளுவதற்கு அர்த்த பூர்வமாகச் செயற்படவுள்ளேன். இதற்கான புதிய சூழ்நிலைகள் உருவாகி வரும் சந்தர்ப்பத்தில் பல்வேறு சக்திகளையும் அவற்றின் தனித்தன்மைகளுடன் ஒன்றிணைய வைத்துச் செயலாற்ற விரும்புகிறேன். இப்பொழுது இலங்கையில் உருவாகியிருக்கும் புதிய அரசியல் சூழ்நிலைக்கு அமைய ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியிலிருந்து விலகி, தனித்துச் செயற்படவுள்ளேன்’ என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

‘ நலிவுற்ற மக்களுக்குரிய விசேட ஏற்பாடுகளும் நன்மைகளும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் சூழலிலேயே பன்மைத்துவத்தின் ஊடான சமத்துவம் சாத்தியமாகும். இதுவே, சுய நிர்ணய உரிமையை அர்த்தமுடையதாக்கும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வையும் சமூக நீதியையும் உருவாக்குவதற்கான ஒரு சட்டவாட்சி முறையை ஏற்படுத்துவதற்காக உழைப்பது என்னுடைய இலக்காகும்.

இது ஒரு பாரிய பணி. பலருடைய அர்த்தமுள்ள பங்களிப்புகள் சேர்ந்தாலே இதைச் சாத்தியமாக்க முடியும். இன்று தமிழ் பேசும் மக்கள், தங்களுடைய அரசியல் தலைமைகளை ஐக்கியப்படுமாறு கோருகின்றனர். ஆனால், அந்த ஐக்கியம் என்பது, எல்லோருடைய கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளுகின்ற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு, சரியான தீர்மானங்களை நோக்கிய விவாதங்களாக அமைய வேண்டும்.

மக்கள் நலன்களுக்காக, மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது எனக்கு அவசியமாயிற்று. எனவே, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகி, புதிய செயற்பாட்டைத் தொடர முன்வந்திருக்கிறேன்’ என தெரிவித்தார்.

Related Posts