Ad Widget

“ஈழத் தமிழர் சுதந்திரம் பெற அனைவரும் சேர்ந்து போராட வேண்டும்”

அனைவரும் சேர்ந்து போராடினால், ஈழத்தில் வாழும் தமிழருக்கு உண்மையான சுதந்திரத்தை, சுயமரியாதை வாழ்வைப் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தில் வெல்ல முடியும் என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.

Karunanithy-Desoo

சென்னையில் புதன் கிழமையன்று காலையில் நடந்த டெசோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை ஐ.நா. பொது அவையில் பேச அனுமதிக்கக்கூடாது, ஐநா. விசாரணைக் குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் டெசோ அமைப்பின் சார்பில், புதன் கிழமையன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், “ஈழப் பிரச்சனையில் முந்தைய மத்திய அரசையும் தி.மு.கவையும் தொடர்ந்து குறை சொல்லிவந்தவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட நரேந்திர மோதி குறித்து என்ன சொல்லப்போகிறார்கள்” என்று கேள்வியெழுப்பினார். கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமில்லை என மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதையும் திருமாவளவன் சுட்டிக்காட்டிப் பேசினார்.

இதற்குப் பிறகு பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, “ஒரு போராட்டத்தில் மக்கள் கிளர்ந்தெழுந்தால்தான் கோரியது கிடைக்கும். இந்தியாவுக்கு அருகில் அடிமைப்பட்டுக் கிடக்கிற அந்த இனம் சிலிர்த்து எழ தமிழகத்திலிருந்து எழுந்த இந்த முழக்கமெல்லாம் சிங்களர்களின் காதுகளில் விழுகிறதோ இல்லையோ, தமிழ் ஆர்வலர்களின் காதுகளில் விழுந்தால், அவர்கள் ஒற்றுமை நம்மை வழிநடத்தும்” என்று குறிப்பிட்டார்.

“பக்கத்துத் தீவில் உள்ள தமிழனை வாழவைக்க முடியாமல் இங்கே உள்ள தமிழன் வாழ்ந்தால் என்ன வாழாவிட்டால் என்ன என்ற சூளுரையை ஏற்க வேண்டும்.

அனைவரும் சேர்ந்து போராடினால் ஈழத்திலே வாழ்கின்ற தமிழனுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத்தருவதற்கான போராட்டத்தில் வெல்ல முடியும்” என்றும் கருணாநிதி குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர், ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் உருவப்படத்தை கொளுத்தினர்.

Related Posts