Ad Widget

இளைஞர் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க யாழ். உறுப்பினர்கள் முடிவு

sri-lanka-youthயாழ் மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சனிக்கிழமை (26) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (27) ஆகிய தினங்களில் மஹரகமவில் நடைபெறவுள்ள 9ஆவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற அமர்வினைப் புறக்கணிக்கவுள்ளதாக இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (23) தெரிவித்தனர்.

கம்பஹாவில் இடம்பெற்ற 26ஆவது இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான துடுப்பாட்டப் போட்டியின் போது அம்பாந்தோட்டை துடுப்பாட்ட அணி வீரர்கள், யாழ்.மாவட்ட வீரர்களைத் தாக்கியமை கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டவை போன்றவற்றினைக் கண்டித்தும் அது தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்து எதிர்வரும் காலங்களில் இவ்வாறான போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியே அவர்கள் இந்த அமர்வினைப் புறக்கணிக்கின்றனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்.காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (23) இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

அத்துடன், இது தொடர்பிலான கடிதங்கள், இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அளகப்பெரும, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா உள்ளிட்டவர்களுக்கும் அனுப்பியுள்ளதாக உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related Posts