Ad Widget

இலங்கை மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் – ஸ்ரீரெலோ

பொது மன்னிப்பு வேண்டுகோள்களை முன்வைக்கும் போது கூட பாரபட்சம் காட்டுகின்ற நிலையியே நம் அரசியல் தலைமைகளிடம் காணப்படுகின்றது. இது நமது இனத்தின் சாபக்கேடா? அல்லது சிலருடன் கூடவே வந்த பிறப்புரிமையா? என்று சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்தார்.

sri-telo-uthaya-rasa

இது தொடர்பில் அவர் வியாழக்கிழமை (27) செய்திக்குறிப்பொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

இலங்கை கடல் எல்லைக்குள் 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி போதைப்பொருள் கடத்தியதாக கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்களுக்கும் 3 இலங்கை மீனவர்களுக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பரீதிபத்மன் சூரசேனா ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி மரணதண்டனை விதித்து தீர்ப்பு அளித்ததுடன், நவம்பர் 14ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீட்டை மெற்கொள்ள முடியும் எனவும் கால அவகாசம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் இந்திய மீனவர்களின் மரணதண்டனை தொடர்பாக இந்திய மற்றும் இலங்கை அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியிடம் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரியிருந்தனர்.

அது மாத்திரமின்றி தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு 20 இலட்சம் இந்திய ரூபாய்களை மேன்முறையீடு செய்வதற்கான செலவாக இலங்கைக்கான இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. அதற்கமைய இந்திய தூதரகமும் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது.

அதனை தொடர்ந்து நாட்டின் வெளியுறவு தொடர்பில் விரிசல்களை ஏற்படுத்தாத வண்ணம் ஜனாதிபதி விரைந்து இந்திய மீனவர்களை விடுவித்துள்ளார். இதேவேளை இந்த மீனவர்களுடன் இணைந்து மரணதண்டனை வழங்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களிற்கும் பொதுமன்னிப்பை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றோம்.

இந்திய மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு கோருவதில் முந்திக்கொண்டவர்கள் இலங்கை மீனவர்களின் மரணதண்டனை தொடர்பாக கரிசனை காட்டாது, மௌனம் காத்து வருகின்றமை குறித்து ஆச்சரியப்பட வேண்டியுள்ளது.

பொதுமன்னிப்பு வேண்டு கோள்களை முன்வைக்கும் போது பாரபட்சம் காட்டுவது என்பது நாம் கோருகின்ற பொதுமன்னிப்பு வேண்டுகோளையே மலினப்படுத்திவிடுகின்றதாக அமைகின்றது.

ஜனாதிபதியிடம் பொதுமன்னிப்பு கோருவது என்ற முடிவுக்கு சென்றுவிட்டால், அச்சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு கோரியிருக்க வேண்டும். இந்த விடயத்தில் தமிழக அரசும் மூத்த அரசியல் தலைவர்களும் நடந்துகொண்ட முறை வரலாற்று தவறாகும்.

இலங்கை மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை தொடர்பாக மௌனம் காத்து இந்திய மீனவர்களுக்கு மாத்திரம் பொதுமன்னிப்பு கோரியிருந்தமை பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் குடும்பங்களையும் அவர்களின் உணர்வுகளையும் உதாசீனம் செய்யும் செயலாகும் என்பதுடன் தான் தப்பினால் போதும் என்ற சுயநல எண்ணத்தின் வெளிப்பாடும் ஆகும்.

ஜனாதிபதி இந்திய மீனவர்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதால், இலங்கை மீனவர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் விடுதலை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts