Ad Widget

இலங்கை தம்பதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழகத்தில் அகதியாக இருந்து வந்த நிலையில், இலங்கைக்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயன்றபோது குழந்தையுடன் கைது செய்யப்பட்ட தம்பதியினரின் விளக்கமறியலை ஜூலை 20 ஆம் திகதி வரை நீடிப்பதாக வேதாரண்யம் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

வவுனியா, கல்விட்டை சந்தி, மகாரம்பைகுளம் பகுதியைச் சேர்ந்த துஷ்யந்த்தேவர் (23). அவரது மனைவி துவாரகா (24), ஒன்றரை வயது மகள் சுகிதா ஆகிய மூவரும் நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடல் பரப்பில் கண்ணாடி இழைப் படகு ஒன்றில் தவித்தபோது, ஜூன் 11ஆம் திகதி நாகை மீனவர்களால் மீட்கப்பட்டு, வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணையில், அவர்கள் படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மீது இந்திய கடவுச்சீட்டு விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வேதாரண்யம் குற்றவியல் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். விசாரணையில், அவர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள கோட்டூர் இலங்கை அகதிகள் முகாமில் இருந்ததும், துஷ்யந்த்தேவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஜூன் 24 ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்டபோது, தம்பதிக்கு ஜூலை 6 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

இந்நிலையில், அத்தம்பதி குழந்தையுடன் வேதாரண்யம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை ஜூலை 20 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி தீனதயாளன் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Posts