Ad Widget

இலங்கையின் ஆறு பிரதேசங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவல்! – சிங்கள ஊடகம் பரபரப்புத் தகவல்

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் இலங்கையின் ஆறு பிரதேசங்களில் ஊடுருவியுள்ளனர் என புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைத் தடைசெய்வதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்த இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களைக் கைதுசெய்வதில் முட்டுக்கட்டைகள் உள்ளன என்று புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்னர் எனவும் தெரியவருகின்றது.

இதுதொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ள மேலதிக தகவல்கள் என்று குறித்த சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:​-

இலங்கையிலுள்ள முஸ்லிம் தீவிரவாதிகளில் சுமார் முப்பது பேர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புகொண்டிருகின்றனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது. கலேவெல பிரதேசத்திலிருந்து சென்று ஐ.எஸ். இயக்கத்துடன் இணைந்துகொண்டார் எனச் சந்தேகிக்கப்படும் நபரொருவர் இராணுவத் தாக்குதலொன்றில் அண்மையில் கொல்லப்பட்டிருக்கின்றார். இந்தப் பயங்கரவாத இயக்கம் இலங்கையில் வேரூன்றுவதைத் தடுப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படாததால் அந்த இயக்கம் காலப்போக்கில் நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாற இடமிருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன.

நிலைமை மேலும் விபரீதமாவதற்கு முன் இந்த இயக்கத்துடன் தொடர்புவைத்திருப்பவர்களை ஒடுக்கும் பொறுப்பு புலனாய்வுப் பொலிஸ் பிரிவினருக்கும் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினருக்கும் வழங்கப்படவேண்டும். அத்துடன், இந்த இயக்கத்தை இலங்கையில் தடைசெய்யப்பட்ட இயக்கமாகப் பிரகடனப்படுத்தவும் வேண்டும். வேலைவாய்ப்புகள் என்ற போர்வையில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று திரும்பும் இலங்கையர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படவேண்டும். அவர்கள் தொழிலுக்காக சென்ற இடங்களில் தொழில் செய்துகொண்டிருக்கிறார்களா என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ள வேண்டியது முக்கியமாகும்.

அத்துடன், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களில் சந்தேகத்துக்கு இடமானவர்களை விமான நிலையத்திலிருந்தே கண்காணிக்கத் தொடங்கவேண்டும். ஐ.எஸ். இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட சுமார் 60 வலைத்தளங்கள் இன்னும் தடைசெய்யப்படாமல் இருக்கின்றன. இதன்மூலம் இலங்கையில் அந்த இயக்கம் வேரூன்ற வாய்ப்புகள் உள்ளன என்று உயர்மட்ட இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், மாலைதீவிலிருந்து புடைவை வியாபாரம் செய்யும் போர்வையில் இலங்கைக்கு வருபவர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படவேண்டும்.

மாலைதீவு அரசு இதுவரை அந்த இயக்கத்துடன் தொடர்புடைய பலரைக் கைதுசெய்துள்ளது. அவர்கள் இலங்கை வழியாகவே மாலைதீவுக்கும் அதே வழியாகவே வெளிநாடுகளுக்கும் செல்வது நிரூபணமாகியுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களின்படி இலங்கையில் கொலன்னாவ, சாலமுல்ல, தெஹிவளை, குருநாகல் மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளிலும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் ஊடுருவியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன், சிரியாவிலுள்ள ஐ.எஸ். இயக்கத்தின் ஆதரவாளர்கள் சுமார் 45 பேர் இலங்கையில் இருக்கின்றனர் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது – என்று குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Posts